Home இந்தியா மக்களவை தேர்தலில் காங்கிரஸ் , பா.ஜ.வுக்கு மாற்றாக 11 கட்சிகள் இணைந்து 3-வது அணி-பிரகாஷ்...

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் , பா.ஜ.வுக்கு மாற்றாக 11 கட்சிகள் இணைந்து 3-வது அணி-பிரகாஷ் கரத்

524
0
SHARE
Ad

prakash_karat--1புதுடெல்லி, பிப் 26 – மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.வுக்கு  மாற்றாக 11 கட்சிகள் இணைந்து 3வது அணியை உருவாக்கியுள்ளன.  தேர்தலில் வெற்ற பெற்ற பின்பு பிரதமரை தேர்வு செய்வோம் என இந்த  கட்சிகள் கூறியுள்ளன. மக்களவை தேர்தல் ஏப்ரல் – மே மாதத்தில்  நடைபெறவுள்ளது.

இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்  காங்கிரசும், பா.ஜ.கவும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இந்த இரு  கட்சிக்கும் மாற்றாக ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட்  கட்சிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆகியவை இறங்கின.

மாநில  கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மாற்று அணியில் சமாஜ் வாடி,  மதச்சார்பற்ற ஜனதா தளம், அதிமுக, பார்வர்டு பிளாக், பிஜூ ஜனதா  தளம், அசாம் கனபரிசத் உட்பட மொத்தம் 11 கட்சிகள் இணைந்துள்ளன.  இக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  டெல்லியில் நேற்று ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர்.

#TamilSchoolmychoice

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், சீதாராம்  யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.பி. பரதன், பீகார்  முதல்வர் நிதிஷ் குமார், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்,  மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, பார்வர்டு பிளாக் தலைவர்  பிஸ்வாஸ், அதிமுக சார்பில் எம்.பி தம்பித்துரை உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ அணிகளுக்கு மாற்றாக  மக்களவை தேர்தலை சந்திக்க இந்த அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்  முடிவு செய்தன. சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின்  கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.  அதில், ஆட்சியிலிருந்து காங்கிரசை  அகற்றி, பா.ஜ மற்றும் மதவாத சக்திகளை ஆட்சிக்கு வராமல் தடுத்து  மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது’’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பின் பேட்டியளித்த பிரகாஷ் கரத் கூறியது,  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் பா.ஜ  தலைமையிலான தே.ஜ கூட்டணிக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய  எங்கள் அணி இருக்கும்.

ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு காரணமான ஐக்கிய முற்போக்கு  கூட்டணியை இந்த தேர்தலில் எங்கள் அணி தோற்கடிக்கும். காங்கிரஸ்  மற்றும் பா.ஜ.வுக்கு இடையே வித்தியாசம் இல்லை. பா.ஜ மத்தியில்  ஆட்சி செய்தபோது நடந்த ஊழலும், பா.ஜ ஆளும் மாநிலங்களிலும் உள்ள  ஊழலும் காங்கிரசைவிட மோசமானது.

இரண்டின் கொள்கைகளும் ஒரே  மாதிரியானதுதான். அந்த கட்சிகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  மதவாத அரசியல் நடத்தும் பா.ஜ. கட்சியால் நாட்டுக்கு ஆபத்து. அதை  ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க மதச்சார்பற்ற மற்ற கட்சிகளும் எங்களுடன்  இணைய வேண்டும். இந்த அணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும்  தங்களது மாநிலங்களில் செல்வாக்கு உள்ளது.

அதனால் எங்களுக்குள்  கூட்டணி அமைக்கவோ அல்லது தொகுதி பங்கீடு செய்யவேண்டிய  அவசியமோ இல்லை. பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம். இந்த  விஷயத்தில் நாங்கள் எப்போதும் சண்டை போட்டதுமில்லை. மொராஜி  தேசாய், வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை நாங்கள்  தேர்தலுக்கு பின்புதான் தேர்ந்தெடுத்தோம் என பிரகாஷ் கரத்  கூறினார்.