Home நாடு காஜாங் இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது!

காஜாங் இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது!

839
0
SHARE
Ad

Wan Azizah 440 x 215மார்ச் 23 – காணாமல் போன மாஸ் விவகாரத்தினாலும், அன்வார் இப்ராகிம் போட்டியிடாத காரணத்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்காத காஜாங் இடைத் தேர்தலில் வாக்களிப்பு  சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.

#TamilSchoolmychoice

மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.

இருப்பினும் ஓரிரு இடங்களில் பிகேஆர் கட்சி ஆதரவாளர்களுக்கும் தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் மூண்டதாக தகவல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தேசிய முன்னணியை கிண்டல் செய்து பிகேஆர் ஆதரவாளர்கள் பல வாக்களிப்பு மையங்களில் கூக்குரலிட்டனர். கையில் இருந்த கனிம நீர் போத்தல்களை வைத்துக் கொண்டு காணாமல் போன விமானத்தைத் தேடுவது போன்று தோற்றம் காட்டி சிலர் கிண்டலடித்தனர்.

வேறு சிலரோ, விமான நிலையத்தில் போமோ செய்து காட்டிய கோமாளித்தனமான செய்கைகளைப் போன்று செய்து காட்டி கிண்டலடித்தனர்.

பிற்பகல் 4 மணி வரை சுமார் 67 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அரச மலேசிய காவல் துறையினர் உள்ளிட்ட 1,188 வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர். இன்று வாக்களிப்பு மந்தமாகவே நடைபெற்றதாகவும், ஆர்வம் குறைவு காரணமாக குறைந்த அளவிலான வாக்காளர்களே வாக்களித்ததாவும் தகவல்கள் கூறுகின்றன.

மொத்தம் 39,278 வாக்காளர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத் தொகுதியில் அன்வார் இப்ராகிமின் துணைவியார் வான் அசிசா எளிதாக வெல்வார் என்பது உறுதியாகிவிட்ட போதிலும் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் நாடே ஆவலாக காத்திருக்கின்றது.

காரணம், கடந்த பொதுத் தேர்தலைவிட அதிக வாக்குகளை வான் அசிசா பெற்றால், அதன் மூலம் எதிர்க் கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளதாக கருதப்படும்.

அதைவிட முக்கியமாக காஜாங் இடைத் தேர்தல் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் அன்வார் இப்ராகிம் செய்யவிருந்த அரசியல் மாற்றங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றதா என்பதை எடுத்துக் காட்டும் பிரதிபலிப்புக் கண்ணாடியாகவும் காஜாங் இடைத் தேர்தல் முடிவுகள் விளங்கும்.

வான் அசிசா மலேசியாவின் முதல் பெண் மந்திரி பெசார் ஆவாரா?

வான் அசிசா வென்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் நுழையும் போதுதான் அடுத்த கட்ட அரசியல் அதிரடிகள்  பிகேஆர் கட்சியிலும், சிலாங்கூரிலும் அரங்கேற்றம் காணும் என அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை நமது நாட்டுப் பெண்கள் எத்தனையோ பதவிகளை வகித்திருந்தாலும், இதுவரை மாநில மந்திரி பெசாராக எந்த பெண்மணியும் பதவி வகித்ததில்லை.

மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவி என்ற சரித்திரப் பெருமையை ஏற்கனவே நிலை நாட்டியுள்ள வான் அசிசா மீண்டும்  ஒருமுறை சரித்திரம் படைக்கும் வண்ணம், சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசாராக பதவியேற்று, மலேசியாவின் முதல் பெண் மந்திரி பெசாராக மீண்டுமொரு முறை சரித்திரம் படைப்பாரா என்பதைக் காணத்தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.

18 வாக்களிப்பு மையங்களிலிருந்தும் வாக்குகள் எண்ணப்பட்டு காஜாங் நகராண்மைக் கழக மண்டபத்தில் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் இன்று மாலை ஏழு மணிக்குள்ளாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.