Home நாடு MH370 பேரிடர்: விமானி ஸஹாரி தான் காரணம் – விசாரணை அதிகாரி தகவல்

MH370 பேரிடர்: விமானி ஸஹாரி தான் காரணம் – விசாரணை அதிகாரி தகவல்

416
0
SHARE
Ad

Pilot.jpgகோலாலம்பூர், மார்ச் 28 – MH370 விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி, பல மைல் தொலைவு பறந்ததற்கு தலைமை விமானி ஸஹாரி அகமட் ஷா தான் காரணம் என்று விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் உட்பட அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரில், ஸஹாரி அளவிற்கு யாரும் அனுபவம் பெற்றவர்கள் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், ஸஹாரி என்ன காரணத்திற்காக இதை செய்தார் என்பது குறித்து அவரின் குடும்பத்தாரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது போல் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஸஹாரியின் தனிப்பட்ட பண நெருக்கடி காரணமாக இதை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அமெரிக்காவின் யுஎஸ்ஏ டுடே (USA Today) மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் ( Sydney Morning Herald) என்ற இரு இணையத்தளங்களும் நேற்று வெளியிட்டுள்ளன. இருப்பினும் தாங்கள் விசாரணை செய்த அந்த அதிகாரி யார் என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை.

அந்த அதிகாரி மலேசிய காவல் துறையில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் என்றும், விமானம் காணாமல் போன முதல் நாள் தொடங்கி அவர் இந்த சிறப்பு விசாரணை குழுவில் இருப்பதாகவும் அந்த இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக ஸஹாரி யாருடனோ போனில் பேசியதாகக் கூறப்படுவதையும் அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

விமானம் கடலில் விழுந்ததற்கு ஸஹாரி தான் காரணம் என்று சில ஊடகங்கள் குறிப்பிடுவதற்கு ஸஹாரியின் இளைய மகனான அஹமட் சேத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதையும் அந்த இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, விமானியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிமுலேட்டரில், அழிக்கப்பட்டிருந்த தகவல்களை இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் மீட்டு விடுவோம் என அமெரிக்க குற்றப்புலனாய்வு (Federal Bureau of Investigation) இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 12.41 மணியளவில் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய விமானம், அடுத்த 1 மணி நேரத்தில் கிழக்கை நோக்கித் திரும்பியதாக மலேசிய அதிகாரிகள் அண்மையில் உறுதிப்படுத்திய பின்னர், காவல்துறையின் விசாரணை 12 விமானப் பணியாளர்கள் மற்றும் 227 பயணிகளின் மீது திரும்பியது.

அதன் பின்னர், விமானி ஸஹாரி வீட்டில் இருந்த சிமுலேட்டர் கருவியை காவல்துறை கைப்பற்றியது. அதில் அழிக்கப்பட்டிருந்த தகவல்களை மீட்டெடுக்க அமெரிக்க குற்றப்புலனாய்வுத் துறையின் உதவியை நாடியது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குற்றம் கண்டறியப்படும் வரை 239 பேரின் மீது சந்தேகப்பட முடியாது என்று இடைக்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.