Home நாடு கேஎல்ஐஏ 2: விமானங்கள் காலதாமதம்! பயணிகள் அவதி!

கேஎல்ஐஏ 2: விமானங்கள் காலதாமதம்! பயணிகள் அவதி!

689
0
SHARE
Ad

klia2airport160414செப்பாங், மே 11 – கடந்த மே 9 ஆம் தேதி முதல் கேஎல்ஐஏ 2 புதிய விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா தனது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு விட்டாலும், விமானம் புறப்படுவதற்கு காலதாமதம் ஆவது, பயணிகளின் பெட்டிகளை அனுப்புவதில் தாமதம் போன்ற சிக்கல்களை சந்தித்து வருகின்றது. இதனால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் திருச்சியிருந்து மாலை 5 மணிக்கு கோலாலம்பூருக்கு புறப்பட வேண்டிய AK26 விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாகி 7.30 மணியளவில் புறப்பட்டது.

மாலை 5 மணி விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் பிற்பகல் 3 மணிக்கே திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். ஆனால் ஏர்ஏசியாவின் இந்த திடீர் அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் வழக்கமான பாஸ்போர்ட் சோதனைகளையெல்லாம் முடித்துவிட்டு சுமார் 4 மணி நேரங்கள் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர்.கைக்குழந்தையுடன் காத்திருந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், கேஎல்ஐஏ 2 புதிய விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அந்த விமானம் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி விடுவதிலும் சுமார் 10 நிமிடங்கள் தாமதப்படுத்தியதாக அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுள் ஒருவர் செல்லியலிடம் தெரிவித்தார்.

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நடவடிக்கை

எல்சிசிடி விமான நிலையத்திலிருந்து கேஎல்ஐஏ 2 விற்கு இடமாற்றம் செய்துள்ளதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அது தான் இது போன்ற தாமதங்களுக்குக் காரணம் என்றும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் அறிவித்துள்ளது.

இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு ஏர் ஏசியாவுடன் இணைந்து தினமும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திட்டமிட்டபடி எல்சிசிடி -ல் இருந்து கேஎல்ஐஏ 2 புதிய விமான நிலையத்திற்கு அனைத்து விமான சேவை நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு விட்டன. இருப்பினும், பயணிகள் பாஸ்போர்ட் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு, பெட்டிகளை அனுப்புவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. நிறைய விமானங்களையும், பயணிகளையும் கையாள வேண்டிய இந்த புதிய விமான நிலையத்தில் இது போன்ற சிக்கல்கள் வருவது எதிர்பார்க்கப்பட்டது தான். இந்த சிக்கல்களைத் தீர்க்க தினமும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஏர் ஏசியாவின் பணியாளர்களோடு தங்களின் பணியாளர்களையும் இணைத்து பயணிகளை வழிநடத்த தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

3 ரிங்கிட் கட்டணம் 

இதனிடையே நேற்று முதல் ஏர்ஏசியா தங்களது பயணிகளிடம் “கேஎல்ஐஏ 2 கட்டணம்” என்ற பெயரில் ஒரு பயணிக்கு தலா 3 ரிங்கிட் வசூல் செய்து வருகின்றது.

இது குறித்து ஏர்ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி ஐரீன் ஓமார் கூறுகையில், “மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் கேஎல்ஐஏ 2 வைப் பயன்படுத்த விமான சேவை நிறுவனங்களுக்கு விதித்த வரிகளைத் தொடர்ந்து ஏர்ஏசியா தங்களது பயணிகளுக்கு தலா 3 ரிங்கிட் கட்டணம் விதிக்கின்றது. இந்த கட்டணம் பயணிகள் ஏரோபிரிட்ஜ் சேவையைப் பயன்படுத்துவதற்கு ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.