Home India Elections 2014 மோடி அரசாங்கத்தின் முக்கியப் புள்ளிகள் யார்? # 1 : உத்தரப் பிரதேச வெற்றியின் சிற்பி...

மோடி அரசாங்கத்தின் முக்கியப் புள்ளிகள் யார்? # 1 : உத்தரப் பிரதேச வெற்றியின் சிற்பி அமிட் ஷா!

676
0
SHARE
Ad

amit-shah_650_040114032128_040614075518புதுடில்லி, மே 19 – பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடி அமைக்கவிருக்கும் அடுத்த இந்திய அரசாங்கத்தில் இடம் பெறப் போகும் முக்கிய புள்ளிகள் யார், அவர்களுக்கு என்ன பதவிகள் என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன.

இந்த முறை பாஜக ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள மாநிலம் உத்தரப் பிரதேசம்.

இங்குள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக மட்டும் தனியாக 71 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதன் கூட்டணிக் கட்சியான அப்னா டால் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வென்றுள்ளதை அடுத்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 73 தொகுதிகளை அந்த மாநிலத்தில் வென்றுள்ளது.

இந்த மாபெரும் வெற்றிக்கு சிற்பியாக – காரணகர்த்தாவாக – வியூகத்தை வகுத்தவராக – போற்றப்படுவர் அமிட் ஷா.

யார் இந்த அமிட் ஷா?

amit-shahபருமனான உடல் வாகு – கருப்பும் வெண்மையும் கலந்த இளந்தாடி – அறிவாற்றலைக் காட்டும் முன் வழுக்கை – முழுக்க முழுக்க இந்தியிலேயே தகவல் ஊடகங்களில் உரையாடும் தன்மை – சர்ச்சைக்குரிய பின்னணி – இப்படியாக உலா வரும் அமிட் ஷா, மோடியைப் போன்றே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அமிட் ஷா மீது இன்னும் நீதிமன்றத்தில் சில கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரே, ஜாமீனில்தான் வெளியில் இருக்கின்றார் என்பது அவரது மற்றொரு முகம்.

மோடியின் வலது கரமாக அவருடனே எல்லா இடங்களிலும் காணப்படும் அவர் அடுத்த மோடியின் அரசாங்கத்தை அமைப்பதிலும், அதில் இடம் பெறப் போகிறவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், முக்கிய இடத்தை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமிட் ஷாவுக்கு என்ன பதவி?

Amit-Shahs-e102481அனைத்து இந்தியத் தகவல் ஊடகங்களிலும் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் அமிட்ஷாவுக்கு மோடி என்ன பதவியைத் தரப் போகின்றார்  என்பதுதான்.

குஜராத்தின் வடோடோரா நாடாளுமன்றத் தொகுதியை ராஜினாமா செய்து விட்டு வாரணாசி தொகுதியை மட்டும் மோடி தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம் ஒருவர் இரண்டு தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்பது இந்திய சட்டவிதி.

அப்படி மோடி விட்டுக் கொடுக்கப்போகும் வடோடோரா தொகுதியில் அமிட் ஷா போட்டியிடலாம் என்பது ஒரு கருத்துக் கணிப்பு.

சிறந்த நிர்வாகத் திறனைக் கொண்டவர் – வியூகவாதி – என்பதால் பிரதமர் அலுவலகத்திலேயே முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்படுவார் என்பது இன்னொரு கணிப்பு.

பாஜகவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கட்சியின் அமைப்புச் செயலாளராகவோ – பொதுச் செயலாளராகவோ பொறுப்பு கொடுக்கப்பட்டு, மோடியின் பக்கத்திலேயே அவரது வலது கரமாக வைத்துக் கொள்ளப்படுவார் என்றும் சில தகவல் ஊடகங்கள் ஆரூடம் வெளியிட்டுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடியின் அரசாங்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் நபராக அமிட் ஷாதான் பார்க்கப்படுகின்றார்.

அமிட் ஷா பின்னணி

1903598வட குஜராத் மாநிலத்தின் மன்சா நகரைச் சேர்ந்த ஷா ஒரு விஞ்ஞானத் துறைப் பட்டதாரி. பின்னர் நிதி நிர்வாகத் துறையில் பணிபுரிந்தவர்.

அரசாங்க இலாகாக்களிலும் பணியாற்றி அரசாங்கம் தொடர்பான நிர்வாக அம்சங்களை நன்கு புரிந்து கொண்டவர்.

2010 முதல் 2012 வரை இரண்டாண்டுகள் குஜராத் மாநிலத்தில் இருக்கக் கூடாது என இந்திய உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு வெளியேறிய காலத்தில்தான் அவர் தனது இன்றைய நிலையை திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டார் என்று கூறப்படுகின்றது.

அந்த இரண்டாண்டுகளில் புது டில்லியில் இருந்து பல்வேறு துறைகளின் நிபுணர்களைச் சந்தித்து தனது அறிவாற்றலையும் சிந்தனை ஆற்றலையும் அவர் வளர்த்துக்கொண்டார் என அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் எப்படி வெற்றிக் கொடி நாட்டினார்?

தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே உத்தரப் பிரதேசத்தில் முகாமிட்ட அமிட் ஷா, முதல் கட்டமாக பல்வேறு மாநிலக் கட்சிகளின் பின்னால் பிரிந்து கிடந்த பாஜக ஆதரவாளர்களை ஒன்றிணைத்து தேர்தல் நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு வாக்களிப்பு மையத்திலும் உருவாக்கினார்.

அந்தந்த வாக்களிப்பு மையத்தில் இருக்கும் ஜாதி வாரியான விகிதாச்சாரப்படியே தேர்தல் நடவடிக்கைக் குழுக்களிலும் பிரதிநிதித்துவம் இடம் பெறச் செய்தார்.

இதனால் பாஜகவின் அடித்தளம் வலுவாக உத்தரப் பிரதேசத்தில் வேரூன்றப்பட்டது.

பாஜக உறுப்பினர்களோடு, ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய சேவா சங்கம் எனப்படும் இந்து இயக்கத்தின் இளைஞர்களும் யுவதிகளும் பிரச்சாரக் களத்தில் இணைந்து கொள்ள பாஜக உத்தரப் பிரதேசத்தில் (உ.பி.) இயல்பாகவே பலம் பெற்றது.

அமிட் ஷா நேரடியாகவே உ.பி.யில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார். அந்தத் தேர்வுகளிலும் அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாதி வாரியாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமித்தார்.

பிற்படுத்தப்பட்ட ஜாதிப் பிரிவினரில் அதிகமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார். இதனால், பாஜக உயர் ஜாதியினரின் கட்சி என்ற தோற்றம் மறைந்து, எளிய, சாதாரண மக்களின் கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டது.

அதற்கேற்ப, பிரதமர் வேட்பாளர் மோடியின் எளிமையான தோற்றம், பின்னணியும் சேர்ந்து கொள்ள பாஜகவுக்கான நேரடி ஆதரவு உ.பி.யில் பெருகத் தொடங்கியது.

முரண்பட்ட குழுக்களிடையே சிறந்த முறையில் சமரசம் செய்து அந்த மாநிலத்தின் உட்கட்சிப் போராட்டங்களையும் தணித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வரவேற்பும் ஆதரவும், கரைபுரண்டு ஓட வேண்டுமென்றால், மோடியே நேரடியாக களம் இறங்க வேண்டும் என்ற வியூகத்தை வகுத்து, அந்த மாநிலத்தில் உள்ள தொகுதியான வாரணாசியில் மோடியை வேட்பாளராக நியமித்தார்.

அதன்மூலம், இந்துக்களின் புனித நகரான காசியை உள்ளடக்கிய – கங்கை நதி பெருக்கெடுத்தோடும் – வாரணாசி தொகுதி ஒரே நாளில் உலக இந்துக்களின் கவனத்தை ஈர்த்தது.

அவரது துல்லியமான அரசியல் கணக்கெடுப்புகள் மிகச் சரியாக வேலை செய்தன.

ஏற்கனவே, குஜராத் அமைச்சரவையில் மோடியின் கீழ் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர் அமிட் ஷா.

இன்றைக்கு, மோடியின் அரசியல் எண்ண ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுபவர் – மேம்பாடு ஒன்றை மட்டுமே முன் வைத்து செயலாற்றுபவர் போன்ற காரணங்களால் – மோடியாலும், பாஜகவாலும் தவிர்க்க முடியாத பலமாக – சொத்தாக மதிக்கப்படுபவர் அமிட் ஷா.

மோடியின் அரசாங்கத்தில் அமிட் ஷாவுக்கு ஏதோ ஒரு பொறுப்பு உறுதி என்ற நிலையில் அது எந்த பொறுப்பு என்பதைக் காணத்தான் பாஜகவினரும் – இந்திய அரசியல் ஆர்வலர்களும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

– இரா.முத்தரசன்.