Home நாடு நிஜார் வீட்டின் முன் ம.இ.காவினர் ஆர்ப்பாட்டம்

நிஜார் வீட்டின் முன் ம.இ.காவினர் ஆர்ப்பாட்டம்

841
0
SHARE
Ad

n_33nijharகோலாலம்பூர், ஜூன் 9 -கெடா மாநில இளைஞர் பகுதித் தலைவர் சோமசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவருக்கு ஆதரவான ஒரு குழுவினர் தொடர்ந்து வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அவர்கள் மஇகா ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கே.எஸ்.நிஜார் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கருத்துரைத்த நிஜார், ஆர்ப்பாட்டம் செய்த குழுவினர் எழுப்பிய கோரிக்கைகள் சிலவற்றில் நியாயம் இருப்பதாகவும், ஆனால், அவற்றை அவர்கள் மஇகா மத்திய செயலவையில் இடம் பெற்றிருக்கும் தங்களின் இளைஞர் பகுதியின் பிரதிநிதிகள் மூலமாக அவற்றை எழுப்ப வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கும், மஇகா ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது  நேரடியாக மத்திய செயலவை பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதே போன்று இளைஞர் பகுதி குறித்த விவரங்களும் இளைஞர் பகுதித் தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும் மத்திய செயலவையில் உள்ள இளைஞர் பகுதி பிரதிநிதிகள் மூலம் முறையாக எழுப்பப்பட வேண்டும்” என்றும் நிஜார் மேலும் கூறியதாக ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதே போன்று, மஇகா தகவல் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியம் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர் ஏ.கே.ராமலிங்கம் ஆகிய இருவர் மீதும், கட்சிக்கு பாதகம் விளைவிக்கும் அறிக்கைகள் விடுத்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்துரைத்த நிஜார்,  இவர்கள் இருவரும் விடுத்த அறிக்கைகள் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் விடுக்கப்பட்டதால் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அதற்கான அதிகாரம் தங்களிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்தப் பிரச்சினையும் மத்திய செயலவையில் உள்ள மஇகா இளைஞர் பகுதியின் பிரதிநிதிகள் மூலம் எழுப்பப்பட வேண்டும் என்று நிஜார் அறிவுறுத்தினார்.