Home உலகம் நட்பு ஊடகங்களில் எழுந்த கடும் விமர்சனம்: தாய்லாந்து உலக அழகி தனது பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்!

நட்பு ஊடகங்களில் எழுந்த கடும் விமர்சனம்: தாய்லாந்து உலக அழகி தனது பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்!

492
0
SHARE
Ad

thailand miss universeபேங்காக், ஜூன் 11 – நட்பு ஊடகங்களில் எழுந்த கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அண்மையில் உலக அழகிப் பட்டம் பெற்ற தாய்லாந்தைச் சேர்ந்த வெலூரி டிட்சயாபட் தனது பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்.

நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில், தான் பட்டத்தை துறப்பதாக அதிகாரப்பூர்வமாக கண்ணீரோடு அறிவித்தார்.

நட்பு ஊடகத்தில் தனது பட்டத்தை துறக்க வேண்டும் என கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்ததால், அதை தன்னாலும், தனது தாயாராலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்றும் வெலூரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“பிரபலங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பொதுமக்களால் எப்போதும் கவனிக்கப்பட்டு வரும் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னைப் பற்றிய நட்பு ஊடகங்களில் எழுந்த அவதூறான தகாத கருத்துக்களால் என் தாயாரின் தூக்கமே போனது. அவர் தனது சந்தோஷம் அனைத்தையும் இழந்தார். அதனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை” என்று வெலூரி கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2014 – ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. அதில் வெலூரி முதலிடத்தில் வென்று பட்டம் பெற்றார். ஆனால் அதன் பின்னர் தான் அவருக்கு எதிராக நட்பு ஊடகங்களில் விமர்சனங்கள் கிளம்பின.

காரணம் நட்பு ஊடகங்களில் அவரது முந்தைய பதிவுகள் கேள்விக் குறியாக்கப்பட்டன. சிவப்பு சட்டை அணிந்த ஆர்பாட்டக்காரர்கள் குறித்து வெலூரி எழுதியிருந்த கடுமையான வார்த்தைகள் சுட்டிக் காட்டப்பட்டன.

வெலூரி தனக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பை முதலில் சமாளிக்க முயற்சி செய்தார். தன்னை திருத்திக் கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துப் பார்த்தார். தான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்து இருக்கவில்லை என்றும் கூறினார்.

ஆனால் தொடர்ந்து நட்பு ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களால் அவரைத் துரத்தின. இதனால் மிகவும் மனம் நிம்மதியின்றி தவித்த வெலூரி இறுதியாக தனது பட்டத்தை துறக்க முன்வந்தார்.

“நான் என் தாயாரை நினைத்தும் மிகவும் கவலையடைகின்றேன். முதலில் போராட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் என் தாயை மகிழ்ச்சிபடுத்தாமல் நான் போராடுவது நியாயமில்லை” என்று வெலூரி கூறினார்.

இதனிடையே, ‘மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து 2014’ நிகழ்வை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் தான் தன்னை பட்டத்தை துறக்கும் படி வற்புறுத்தியதாகக் கூறப்படுவதை வெலூரி மறுத்தார்.

இந்நிலையில், எதிர்வரும் அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களின் பின்புலங்களை (நட்பு ஊடகங்கள் உட்பட) அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்னரே அவர்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான ப்ரனோம் தாவோர்ன்வேஜ் கூறியுள்ளார்.