Home இந்தியா சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம்- ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம்- ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

793
0
SHARE
Ad

jeyaசென்னை, பிப்.19-  ஏழை, எளிய மக்களுக்கு தினமும் குறைந்த விலையில் தரமான உணவு வகைகள் வழங்குவதற்காக சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில், பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சென்னை மாநகராட்சியின் மலிவு விலை சிற்றுண்டி உணவகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சத்தான உணவு வகைகளை ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான ஏழை மக்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் ஆவார்கள். இதுதவிர, சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து, சிறிது காலம் தங்கி செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

#TamilSchoolmychoice

இவர்கள் அனைவரும் தங்களது குறைந்த வருவாயில் உணவுக்கென அதிகம் செலவு செய்ய முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு இவர்கள் அனைவருக்கும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சிப் பகுதியில், சென்னை மாநகராட்சியின் மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்களைத் தொடங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மேலும் 14 இடங்களில் புதிதாக தொடங்கப்படும் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களுக்கான கல்வெட்டினையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைக்கிறார். சாந்தோம் நெடுஞ்சாலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிற்றுண்டி உணவகத்தைத் தொடங்கி வைத்ததும், 15 சிற்றுண்டி உணவகங்களும் ஒரே நேரத்தில் செயல்படத் தொடங்கும்.

சென்னை மாநகராட்சியின் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திட்டத்திற்காக மாதந்தோறும் 500 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டி உணவகங்களில், இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் மற்றும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இந்த சிற்றுண்டி உணவகம் மூலம், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், தள்ளு வண்டி, கை வண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் பயன் அடைவார்கள்.