Home நாடு காலிட் இப்ராகிம், பாஸ் கட்சி ஆதரவுடன் தேசிய முன்னணி சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமா?

காலிட் இப்ராகிம், பாஸ் கட்சி ஆதரவுடன் தேசிய முன்னணி சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமா?

368
0
SHARE
Ad

Khalid Ibrahimகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – சிலாங்கூரில் நிகழ்ந்து வரும் அதிரடி அரசியல் மாற்றங்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

பேராக் மாநிலத்தைக் கைப்பற்றியதைப் போன்று, சிலாங்கூர் மாநிலத்தையும் தேசிய முன்னணி கைப்பற்றுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

தற்போது 56 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சிலாங்கூர் சட்டமன்றத்தில் அம்னோ 12 தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது. பாஸ் கட்சி 15 தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் அம்னோ ஓரணியாக பிளவுபடாமல் நிற்கும் என்பது உறுதி.

ஆனால், பாஸ் கட்சி ஓரணியாக, அனைத்து 15 சட்டமன்ற உறுப்பினர்களும் நடப்பு மந்திரி பெசார் காலிட் இப்ராகிமிற்கு ஆதரவளித்தால், அதன்வழி மொத்தம் 27 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை காலிட் பெற்றுவிடுவார்.

அவரது ஒரு சட்டமன்றத் தொகுதியையும் சேர்த்தால், மொத்தம் 28 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை – அதாவது சரிசமமாக 50 சதவீத சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை – காலிட் பெற்று விடுவார்.

பிகேஆர் கட்சி அல்லது ஜசெகவிலிருந்து யாராவது ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் காலிட் பெற்றுவிட்டால், சிலாங்கூர் மாநிலம் அப்படியே தேசிய முன்னணி ஆதரவு மாநிலமாக மாறிவிடும்.

அப்படி ஒரு நிலைமை வந்தால், தேசிய முன்னணியின் ஆதரவோடு ஆட்சியைப் பிடிப்பதால், இனி எப்போதும் காலிட் அம்னோவின் கைப்பாவையாகவே செயல்படுவார்.

ஜசெக 15 சட்டமன்றத் தொகுதிகளை தன் கைவசம் வைத்திருக்க, பிகேஆர் கட்சியோ 14 சட்டமன்றத் தொகுதிகளை தன்வசம் வைத்திருக்கின்றது. ஆனால் அதில் ஒன்று நடப்பு மந்திரி பெசார் காலிட் இப்ராகிமின் தொகுதியாக இருப்பதால், தற்போதைய நிலவரப்படி 13 தொகுதிகளை மட்டுமே அது கொண்டிருக்கின்றது.

பிகேஆர்-ஜசெக இணைந்தாலும் 28 தொகுதிகளைத்தான் அவர்கள் கொண்டிருப்பார்கள். மேலும் ஓரிரு தொகுதிகள் அவர்களுக்கு பாஸ் கட்சியிலிருந்து தேவைப்படும் என்பது ஒருபுறமிருக்க, தங்கள் கைவசம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய முன்னணி பக்கம் தாவி விடாமல் இருக்க அவர்கள் தற்காப்பு  நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆட்சி மாற்ற சூழ்நிலை வந்தால் சிலாங்கூர் சுல்தானும் அம்னோ-தேசிய முன்னணி பக்கம்தான் சாதகமாக நிற்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு முன்னோட்டமாகத்தான், தான் மந்திரி பெசாராகத் தொடர சிலாங்கூர் சுல்தான் ஆதரவளித்துள்ளார் என காலிட்டும் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

எனவே, அடுத்த சில நாட்களில் பாஸ் கட்சி மக்கள் கூட்டணியில் இணைந்து நின்று பிகேஆரின் மந்திரி பெசார் மாற்றத்திற்கான முயற்சிக்கு ஆதரவளிக்குமா?

அல்லது மக்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி, தேசிய முன்னணிக்கு ஆதரவளித்து, அதன்வழி சிலாங்கூரில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்பதுதான் அனைவர் மனங்களிலும் தற்போது விஸ்வரூபமெடுத்து நிற்கும் கேள்வி!

-இரா.முத்தரசன்