Home நாடு முன்னாள் துப்பறிவாளர் பாலா நாடு திரும்பினார் – முதல் சத்திய பிரமாணம் உண்மை என பிரகடனம்

முன்னாள் துப்பறிவாளர் பாலா நாடு திரும்பினார் – முதல் சத்திய பிரமாணம் உண்மை என பிரகடனம்

701
0
SHARE
Ad

PI-Bala-Airport-Feature

 

 

#TamilSchoolmychoice

 

 

 

 

 

பிப்ரவரி 24 – கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டையே உலுக்கி வரும் மங்கோலிய அழகி அல்தான்துன்யாவின் கொலை வழக்கு விவகாரத்தால் பிரபலமாகிவிட்ட முன்னாள் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று நிரந்தரமாக மலேசியா திரும்பினார்.

அவருக்கு விமான நிலையத்தில் திரளான மக்களும், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களும் திரண்டு வந்து வரவேற்பு வழங்கினர். அவர்களின் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, சமூகத் தலைவர் ஹாஜி தஸ்லிம்,  ஆகியோரும் அடங்குவர்.

“பகவத் கீதையின் மீது சத்தியம்- முதலாவது சத்திய பிரமாணம் உண்மை”

விமான நிலையத்தில் வந்திறங்கிய பாலசுப்ரமணியம் தன் கையில் வைத்திருந்த பகவத் கீதை புத்தகத்தின் மீது சத்தியம் செய்து, தான் முதன் முதலில் பிரதமர் நஜிப்பை மங்கோலிய அழகி அல்தான்துன்யாவுடன் சம்பந்தப்படுத்தி வெளியிட்ட முதலாவது சத்தியப் பிரமாணம்தான் உண்மையானது என்று கூறினார்.

“என்னை மன்னித்து விடுங்கள். இரண்டாவது சத்தியப் பிரமாணம் உண்மையானது அல்ல. இந்த பகவத் கீதை புத்தகத்தின் மீது சத்தியம்” என அவர் விமான நிலையத்தில் கூறினார்.

அல்தான்துன்யா மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் குறித்து அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தவர் என்ற முறையில் முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியம் ஒரு சத்திய பிரமாணத்தை தாக்கல் செய்திருந்தார்.

அந்த சத்திய பிரமாணத்தில் பிரதமர் நஜிப்புக்கு அல்தான்துன்யாவுடன் தொடர்பு உண்டு என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் மறுநாளே அந்த சத்திய பிரமாணம் உண்மையில்லை என்று மற்றொரு சத்திய பிரமாணத்தை தனது புதிய வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளின் காரணமாக, குடும்பத்துடன் பாலா நாட்டை விட்டே வெளியேறினார்.

அதன் பின்னர் தான் செய்த இரண்டாவது சத்திய பிரமாணம் நெருக்குதலின் காரணமாக செய்யப்பட்டது என பல தடவை பேட்டிகளில் கூறியிருக்கின்றார்.

மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி கூட்டணியான மக்கள் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யப் போவதாகவும், அல்தான்துன்யா விவகாரம் குறித்து மேலும் பல தகவல்களை வெளிக் கொணரப் போவதாகவும் பாலசுப்ரமணியம் கூறினார்.

குடும்பத்துடன் அல்லாமல் பாலசுப்ரமணியம் தனியாக நாடு திரும்பியுள்ளார்.

தனது பாதுகாப்பு குறித்து தான் அஞ்சவில்லை என்றும் அப்படியே தனக்கு ஏதாவது நடந்தால், எல்லாரும் யாரை சந்தேகப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் தனக்கு ஏதும் ஆபத்து நேரும் என்று நினைக்கவில்லை என்றும் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், இரண்டாவது சத்திய பிரமாணம் தயாரிப்பதில் சம்பந்தப்பட்டிருந்த கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷனுடன் இணைந்து தான் பணியாற்றப் போவதில்லை என்றும் ஆனால் அவர் தன்னுடன் ஒத்துழைக்க முன்வந்தால் தானும் அவருடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் பாலசுப்ரமணியம் கூறினார். “ஆனால் அவரைத் தேடி நான் செல்லப் போவதில்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.

–    மலேசியாகினி