Home நாடு ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் – கலிடா புஸ்தாமான் திருமணம்: நவம்பர் 8இல் மாபெரும் விருந்து!

ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் – கலிடா புஸ்தாமான் திருமணம்: நவம்பர் 8இல் மாபெரும் விருந்து!

635
0
SHARE
Ad

Tunku-Ismail  Johor Crown Princessஜோகூர் பாரு, நவம்பர் 2 – இதுவரை திருமணம் புரியாமல் இருந்த மலேசிய அரச குடும்பங்களின் முக்கிய வாரிசுகளில் ஒருவரான, ஜோகூர் மாநிலத்தின் துங்கு மகோத்தா எனப்படும் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், 21 வயது செ புவான் கலீடா புஸ்தாமாம் என்ற பெண்மணியைக் கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 24ஆம் தேதி மணம் புரிந்துள்ளார்.

ஜோகூர் பாருவிலுள்ள இஸ்தானா புக்கிட் செரின் என்ற சுல்தான் அரண்மனையில் தனிப்பட்ட முறையில் அந்தத் திருமண வைபவம் நிகழ்ந்தது. இரு தரப்புக்கும் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ஜோகூர் காற்பந்து சங்கத்தின் தலைவராகவும் 30 வயதான துங்கு இஸ்மாயில் செயல்படுகின்றார்.

#TamilSchoolmychoice

தனது திருமண வைபவத்திற்கு ரால்ஸ் ராய்ஸ் காரில் காவல் துறையின் பாதுகாப்புடன் அரண்மனைக்கு துங்கு இஸ்மாயில் வந்திருந்தார்.

அவரது தந்தையாரும் ஜோகூர் சுல்தானுமாகிய சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் அவரது துணைவியார் ராஜா சரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் ஷா மற்றும் அவரது 5 சகோதர சகோதரிகளும் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் மாநில மந்திரிபெசார் டத்தோ முகமட் காலிட் நோர்டின் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜோகூர் முஃப்டி டத்தோ முகமட் தாஹ்ரிர் சம்சுடின் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணத்தை முன்னிட்டு பெரிய அளவிலான அரச விருந்து நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 8ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா பெசாரில் நடைபெறும்.

மற்ற மாநில சுல்தான்கள், ஆளுநர்கள், பிரதமர், துணைப் பிரதமர், அமைச்சர்கள், புருணை சுல்தான், சிங்கை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் இந்த அரச திருமண விருந்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.