Home இந்தியா ஜெயலலிதா வழக்கு விசாரணையில் அரசியல் வேண்டாம் – புதிய நீதிபதி குமாரசாமி!

ஜெயலலிதா வழக்கு விசாரணையில் அரசியல் வேண்டாம் – புதிய நீதிபதி குமாரசாமி!

393
0
SHARE
Ad

jayalalitha-justice-kumarasamy-61003கர்நாடக, ஜனவரி 6 – சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்று நீதிபதி குமாரசாமி  கூறியுள்ளார்.

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பின்னர் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

அத்துடன் சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும் படியும், அதற்காக தனி பெஞ்ச் நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமனம் செய்யப்பட்டார்.

இதன்படி தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் குமாரும் ஆஜரானார்கள்.மேலும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் 3-வது நபராக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் குமரேசன் தெரிவித்தார்.

அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல் நிறுத்தி வைத்ததுடன், அன்பழகனுக்கும், சொத்துகுவிப்பு வழக்குக்கும் உள்ள தொடர்பு குறித்து குமரேசனிடம் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசனிடம் நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார்.