Home உலகம் சிறிசேனாவின் நெருக்கம் இந்தியாவுடனா? சீனாவுடனா? 

சிறிசேனாவின் நெருக்கம் இந்தியாவுடனா? சீனாவுடனா? 

434
0
SHARE
Ad

indiaகொழும்பு, ஜனவரி 10 – இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள சிறிசேனா, இந்தியாவுடன் நெருக்கமாக செயல்படுவாரா அல்லது சீனாவுடனா என்ற விவாதம் தற்போது ஊடகங்களில் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவிற்கு, இந்தியாவின் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.காவும் முழு ஆதரவு அளித்து வந்தன.

இந்தியாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, கடும் எதிர்ப்புகளையும் மீறி விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கைஅரசுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக, பதவி ஏற்ற போது, கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்.

இவ்வாறாக இந்தியா, இராஜபக்சேவுடன் இணக்கம் காட்டி வந்தாலும், அவர் சீனாவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார். சீனாவுடன் அவர் மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார்.

அவரது காலத்தில் இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம் கட்டுவதற்கு சீனா, பல பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதேபோல் கொழும்பு துறைமுகத்தில், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் நீர்மூழ்கி கப்பல் நிறுத்துவதற்கு இராஜபக்சேவின் அரசு சம்மதம் தெரிவித்தது.

ஒட்டுமொத்தமாக இராகபக்சே, இந்தியாவை விட சீனாவின் நட்பையே பெரிதாக கருதினார். இந்நிலையில் அவரின் தோல்விக்கு, சீனாவுடன் அவர் வைத்திருந்த அதிகளவிலான நெருக்கமும் காரணமாக கூறப்பட்டது.

அதனை சிறிசேனாவின் ஆதரவாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தநிலையில், இலங்கை அதிபர் தேர்தல் முடிவு குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கையின் புதிய அதிபராக சிறிசேனா தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் தலைமையேற்று நாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை கொண்டு வருவார்.”

“இலங்கையின் புதிய அதிபர், சீனாவுடனான நட்புரீதியான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவார் என்றும், சீனா தொடர்புடைய திட்டங்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு வழங்குவார் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அதிபரான சிறிசேனாவின் செயல்திட்டங்கள் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்குமா அல்லது சீனாவிற்கு ஆதரவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.