Home தொழில் நுட்பம் வருங்காலத்தில் இணையமே இருக்காது – கூகுள் தலைவர் எரிக் சிமித்!

வருங்காலத்தில் இணையமே இருக்காது – கூகுள் தலைவர் எரிக் சிமித்!

523
0
SHARE
Ad

browser1டவாஸ், ஜனவரி 24 – இனி வரும்காலத்தில் இணையம் என்பதே இல்லாமல் போய்விடும் என்று கூகுள் தலைவர் எரிக் சிமித் தெரிவித்துள்ளார்.

இணையம் இல்லாமல் உலகம் இயங்காது என்ற சூழலை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது நம்முள் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

ஆனால் இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் விளக்கம், நவீனத்தை நோக்கி மானுடத்தின் நகர்வு எத்தகையதாக இருக்கும் என்று நமக்கு புரிய வைப்பதாக உள்ளது.

#TamilSchoolmychoice

டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட எரிக் சிமித், எதிர்காலத்தில் இணையத்தின் வளர்ச்சி குறித்த கேள்வி ஒன்றிற்கு மேற்கூறியவாறு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“எதிர்காலத்தில் இணைய வளர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு என்னால் மிக எளிதாக பதில் அளிக்க முடியும். இனி வரும்காலத்தில் இணையம் என்பதே இல்லாமல் மறைந்து போய்விடும்.

நான் கூறியது இணையம் என்ற தனித்த வார்த்தையை. இணையம் எது என்று நாம் அறியாதவகையில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் இணையம் ஆக்கிரமித்து இருக்கும்.”

“இணையத்தை வழங்க எண்ணற்ற ‘ஐபி முகவரிகள்’ (IP Address), ‘சென்சார்கள்” (Censors ) மற்றும் கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும். நாம் பயன்படுத்தும், நாம் அணிந்து கொள்ளும் அனைத்திலும் இணையம் நிறைந்திருக்கும்.

கற்பனை செய்து பார்த்தால், நான் கூறவருவது அனைவருக்கும் புரியும். நாம் ஒரு அறையில் நுழையும் பொழுது, அந்த அறை தன்னிச்சையாக நம்மை உணர்ந்து கொள்கிறது.

நம் பொருட்களை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. இதுபோன்றதொரு சூழல் உருவாகும், அது பயனர்களுக்கு அதிக நன்மையை செய்தாலும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடும் வர்த்தக அபாயத்தை ஏற்படுத்தும்.”

“அதுபோன்றதொரு உலகத்திற்கு நாம் வெகு அருகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மிகப் பிரத்யேகமான அந்த உலகம் விரைவில் நம்மை வியாபித்துக் கொள்ளும்” என்று அவர் கூறியுள்ளார்.