Home கலை உலகம் மலேசிய கலை உலகம் விருது விழா 2015: கலைஞர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரம்!

மலேசிய கலை உலகம் விருது விழா 2015: கலைஞர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரம்!

690
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 18 – கலை உலகம் எண்டர்பிரைஸ் நிறுவனம், முதல் முறையாக மலேசிய கலை உலக விருது விழாவை நடத்தவிருக்கிறது. இவ்விழா வரும் பிப்ரவரி 26-ம் தேதி, வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.

இதற்கான அதிகாரப்பூவ பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் மாலை விஸ்மா துன் சம்பந்தனில் நடைபெற்றது. அதில் கலை உலகம் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் எஸ்.பி.சரவணன், நிர்வாகிகள் குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமி, பிரபல பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் அக்னி சுகுமார் மற்றும் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMAG1545

#TamilSchoolmychoice

(செய்தியாளர்கள் சந்திப்பில் இடமிருந்து அக்னி சுகுமார், குருஸ்ரீ சந்திரமோகன், எஸ்.பி சரவணன், ஷாலினி பாலசுந்தரம்)

இவர்களுடன் கலை உலகம் நிறுவனத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த வினோ ஷான், எஸ்பி பிரபா ஆகியோருடன் அந்நிறுவனத்தின் இளம் அறிவிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விருது விழா குறித்து விளக்கமளித்த சரவணன், மலேசியாவில் 2014-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், தொலைக்காட்சி படம், குறுந்தட்டு படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் சிறந்த படைப்புகளின் அடிப்படையில் மொத்தம் 39 பிரிவிகளில் விருதுகள் வழங்கப்படவிருப்பதாக அறிவித்தார்.

மேலும், “மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என 2 சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. தற்போது சிறந்த கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு பேஸ்புக் வாயிலாக நடைபெற்று வருகின்றது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி இரவு 10 மணியளவில் தான் இந்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைகின்றது” என்றும் சரவணன் தெரிவித்தார்.

இந்த இரண்டு சிறப்பு விருதுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் என்பது விருது விழாவின் இறுதியில் தான் அறிவிக்கப்படும் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 1-ம் தேதி, 39 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மலேசிய கலை உலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் வாயிலாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், எனவே விருது பெறுபவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சரவணன் தெரிவித்தார்.

முறைப்படி ஏற்பாடுகள்

IMAG1564

(இந்த செய்தியாளர்கள் சந்திப்பை தமிழ் வாணி கருணாநிதி அழகிய தமிழில் வழிநடத்த, நடிகர்கள் கேஎஸ் மணியம், ஹரிதாஸ், அகோந்தரன், சதீஷ் ராவ், இயக்குநர் விக்னேஸ் லோகராஜ் அசோகன், மணிமாலா கிருஷ்ணன், பரத நாட்டியக் கலைஞர் ‘அம்மா’ சூரியா ராமையா, சாய் பண்பலை நிர்வாகிகள் சாய் மற்றும் தயாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்)

இதற்கு முன்பு மலேசியாவில் நடத்தப்பட்ட பல விழாக்களில் ஏற்பட்ட பல்வேறு குறைகளை அனுபவமாகக் கொண்டு, மலேசிய கலை உலகம் விருது விழாவில், ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி சரியாக செய்யப்பட்டு வருகின்றன.

சரியாக மாலை 7 மணி முதல் 8 மணி வரை சிவப்புக் கம்பள வரவேற்பு நிறைவடைந்தவுடன் 8.30 மணிக்கு விழா தொடங்கும் என்றும், 8.45 மணிக்கு நுழைவு வாயில் அடைக்கப்பட்டு விடும் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

அதே போல், அழைப்பிதழ்களிலும் இரண்டு வகைகள் உள்ளன. விழாவில் மூத்த கலைஞர்கள் ஒருபுறமும், இளம் கலைஞர்கள் ஒருபுறமும் அமரும் வகையில், சிவப்பு, நீலம் என இரண்டு வண்ணங்களில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த விருது விழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான ஷாலினி கூறுகையில், “இந்த விருது விழாவில் விருது பெறும் ஆண்கள் கருப்பு/ வெள்ளை உடையிலும், பெண்கள் சிவப்பு / வெள்ளை உடையிலும் வருவது சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விருது விழா இந்தியாவிலுள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்படவுள்ளதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.

தங்களது தொகுப்பாளர் சதீஷ் தலைமையில் சோமா அரங்கில் முதல் முறையாக எல்இடி திரை அமைக்கப்பட்டு  மேடை நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது என்று குறிப்பிட்ட சரவணன், குறைந்த செலவில் பிரம்மாண்டமான அளவில் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உலக அளவிலான அங்கீகாரம்

IMAG1569

மலேசியக் கலைஞர்களுக்கு இந்த விருது விழா மூலமாக அவர்களின் திறமைகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றும், பத்திரிகைகள் இந்த விழாவிற்கு தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமியும், அக்னி சுகுமாரும் கேட்டுக்கொண்டனர்.

மலேசியக் கலைஞர்களை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த விருது விழா, எதிர்வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பான உலகளவிலான ஏற்பாடுகளோடு நடத்தப்படும் என்றும் சரவணன் நம்பிக்கை அளித்தார்.

மலேசிய திரைப்படங்களில் சிறந்த முறையில் பணியாற்றி, அப்படத்தை வெற்றியடையச் செய்யும் எந்த ஒரு கலைஞருக்கும் இந்த விருது வழங்கப்படும் என்றும், அவர் வெளிநாட்டினராக இருந்தாலும் கூட, மலேசிய படத்தில் அவர் பணியாற்றி, அதை வெற்றிப் படைப்பாக ஆக்க உழைத்தால் இந்த விருது அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் என்றும் சரவணன் விளக்கமளித்தார்.

மலேசியாவில் மலாய், சீன, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் வெளிவந்திருந்தாலும், மலேசியத் தமிழ் கலைஞர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டுப் படங்களின் தாக்கங்கள் காரணமாக, ஊடகங்களின் ஆதரவு கிடைக்காத நிலை இருந்து வந்தது.

ஆனால், அந்த நிலையை மாற்றி மலேசிய தமிழ் கலைஞர்களின் மீதும் ஊடக வெளிச்சத்தை பாய்ச்சி அவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்க கடுமையாக உழைத்தவர் எஸ்.பி சரவணன்.

பல்வேறு தமிழ் நாளிதழ்களில் பணியாற்றியவர் தற்போது, மலேசிய கலை உலகம் என்ற நிறுவனத்தையும் துவங்கி கலைஞர்களுக்கு மாபெரும் விருது விழாவையும் ஏற்பாடு செய்திருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த விருது ஒவ்வொரு மலேசியக் கலைஞர்களுக்கும் உலக அளவில் ஒரு சிறந்த அங்கீகாரமாக இருக்கப்போவதோடு, மலேசியாவில் உள்ள மற்ற மொழி கலைஞர்களிடையே, தமிழ் கலைஞர்களின் திறமைகள் மீதும் மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்