Home தொழில் நுட்பம் “முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப அதிர்ச்சி...

“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பு!

2467
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 14 – கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் “முதல்நிலைப் பதிப்பு” எனும் சிறப்புப் பதிகை இன்று முதல் பயனர்களின் சொந்தப் பயனுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என்று அதன் உருவாக்குநர் முத்து நெடுமாறன் இன்று அறிவித்தார்.

Murasu Anjal-New-Logo-

இன்று மாலை 7.30 மணிக்குத் தொடங்கிய “இணைமதியம்” என்ற தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா, செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த அறிமுகத்தோடும் நடந்தேறியது.

#TamilSchoolmychoice

இந்த விழாவில் முரசு அஞ்சலின் புதிய பதிகையை அறிமுகப்படுத்தி, அதன் புதிய தொழில் நுட்ப உள்ளடக்கங்களை திரையில் படங்களுடன் விளக்கிக் காட்டி உரையாற்றிய முத்து நெடுமாறன் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளிக்கும் விதமாக இந்த இனிய அறிவிப்பைச் சேர்த்தார்.

அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, மலேசியத் துணைக் கல்வி அமைச்சர் ப.கமலநாதன் மேடைக்குச் சென்று, முரசு அஞ்சலின் புதிய பதிகையை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

இனி ‘முரசு அஞ்சல்’ தமிழ் மென்பொருளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்களின் பெயரையும் இணைய அஞ்சல் முகவரியையும் http://muthal.anjal.net எனும் இணைய முகவரியில் உள்ள ஒரு படிவத்தில் செலுத்திவிட்டு, முரசு அஞ்சலின் “முதல்நிலைப் பதிப்பை” இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கலாம்.

சில குறிப்பிடத்தக்க தொழில் நுட்ப மேம்பாடுகளைக் கொண்டுள்ள வணிகப் பதிப்பு, “முரசு அஞ்சல் முழுநிலைப் பதிப்பு” எனும் பெயரில் தொடர்ந்து விற்பனையில் இருந்து வரும். வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக நோக்குடைய பயனர்கள், மேலும் கூடுதலான வசதிகளைப் பெற விரும்புபவர்கள் இந்த வணிகப் பதிப்பை பயன்படுத்தலாம்.

முரசு அஞ்சல் – குறிப்பிடத்தக்க தொழில் நுட்பக் கூறுகள்

IMG_8329

முரசு அஞ்சல் புதிய பதிகையில் சில குறிப்பிடத்தக்க புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை முத்து நெடுமாறன் புகுத்தியுள்ளார்.

முதல்நிலைப் பதிப்பில் ‘அஞ்சல்’ மற்றும் ‘தமிழ் 99’ விசைமுகங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. முழுநிலைப்பதிப்பில் ஏற்கனவே உள்ள அனைத்து விசைமுகங்களும் வழக்கம்போல் இயங்கி வரும்.

செல்லினத்தின் 4.0ஆம் பதிகையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ‘அஞ்சல்’ விசைமுகம் இரண்டு பதிப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

முரசு அஞ்சல் இலவசப் பதிப்பில் ‘இணைமதி’ எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது. மிக அழகிய வடிவிலான இந்த எழுத்துரு ஆப்பிள் கருவிகளிலும், எச்.டி.சி ஆண்டிராய்டு கருவிகளிலும், மெக்கிண்டாஷ் கணினிகளிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள எழுத்துரு.

விண்டோசுக்கான இலவச முரசு அஞ்சல் பதிகையில் இந்த எழுத்துரு சேர்க்கப்பட்டதன் வழி அதிகப் புழக்கத்தில் உள்ள அனைத்துக் கருவிகளிலும் கணினிகளிலும் ‘இணைமதி’ தமிழ் எழுத்துகளை அழகாக வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இணைமதியம் எழுத்துருவைக் கருப் பொருளாகக் கொண்டுதான் இன்றைய நிகழ்ச்சிக்கும் “இணைமதியம்” என்ற தலைப்புப் பெயர் சூட்டப்பட்டது.

விண்டோஸ் (Windows) இயங்குதளத்தை எல்லா நிலைகளிலும் பயன்படுத்தும் அனைத்துக்  கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் இனி முரசு அஞ்சல் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வண்ணம் புதிய பதிகை மேம்படுத்தப்பட்டுள்ளது.

சில அனைத்துலக இயங்கு தளங்களில் தமிழ் மொழி இயல்பாகவே இலவசமாகப் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் குறிப்பாக ‘லதா’ போன்ற அழகு குறைந்த எழுத்துருக்கள்,சரியான முறையில் அமையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டுதான் தாங்கள் முரசு அஞ்சல் மென்பொருளை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கும் அதிரடி முடிவை எடுத்ததாகவும் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.

அதேவேளையில் தமிழ் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் தமிழ் மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்கு அதன் விலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடும், கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் உலகம் எங்கிலும் தமிழின் பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும் தாங்கள் மேற்கொண்ட முடிவுதான் அனைவருக்கும் முரசு அஞ்சல் மென்பொருளை இலவசமாக வழங்கும் முடிவு என்றும் முத்து நெடுமாறன் அறிவித்தார்.

முரசு அஞ்சல் ‘முதல்நிலைப் பதிப்பை’ கீழ்க்காணும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

http://muthal.anjal.net