Home அவசியம் படிக்க வேண்டியவை 1 எம்டிபி-க்கு 2 பில்லியன் கடன் பிரச்சனையில் ஆனந்த கிருஷ்ணன்!

1 எம்டிபி-க்கு 2 பில்லியன் கடன் பிரச்சனையில் ஆனந்த கிருஷ்ணன்!

704
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரரான டி.ஆனந்தகிருஷ்ணன், எத்தனையோ உலகளாவிய தொழில்களில் பல கோடி முதலீடுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் எப்போதும் எழுந்ததில்லை.

ananda-krishnanஆனால், அண்மையில், இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தை ஆனந்தகிருஷ்ணன் வாங்கிய விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் முறைகேடுகள் புரிந்ததாகவும் அதில் ஆனந்தகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருந்ததாகவும் இந்திய அரசாங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது 1எம்டிபி விவகாரத்திலும் ஆனந்தகிருஷ்ணனின் தஞ்சோங் நிறுவனம் 2 பில்லியன் ரிங்கிட் கடன் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இதுவும் ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஹூஸ்னி, தஞ்சோங் நிறுவனம் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் 1எம்டிபி நிறுவனத்திற்கு 2 பில்லியன் கடன் ஏற்பாடு செய்ததாக அறிவித்துள்ளார்.

2 பில்லியன் ரிங்கிட் ஆனந்தகிருஷ்ணன் ஏற்பாடு செய்தாரா?

ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னால் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா சமர்ப்பித்திருந்த கேள்வி ஒன்றுக்கு வழங்கிய மார்ச் 11 தேதியிட்ட எழுத்துபூர்வமான பதிலில் நிதி அமைச்சு, ஆனந்தகிருஷ்ணன் 1எம்டிபி நிறுவனத்திற்கு எந்தவித கடனும் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தது.

ஆனால், இப்போதோ, நேற்றைய பதிலில், இரண்டாவது நிதியமைச்சர், தஞ்சோங் நிறுவனம் கடன் கொடுத்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

தஞ்சோங் நிறுவனம் ஆனந்த கிருஷ்ணனின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் என்பதால், இந்த கடனுக்குப் பின்னணியில் இருப்பவர் ஆனந்தகிருஷ்ணன்தான் என பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிம் சீ சின் (பாயான் பாரு தொகுதி) தியான் சுவா (பத்து தொகுதி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆனந்த கிருஷ்ணன் அளித்துள்ள 2 பில்லியன் கடன் குறித்து முன்பு இருந்ததை விட கூடுதலான கேள்விகள் தற்போது எழுந்துள்ளன என்றும் இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

1 MDB POSTER15 மாதங்களில் இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் எனவும், இதற்குரிய வட்டி ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இந்தக் கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் இரண்டாவது நிதியமைச்சர் ஹூஸ்னி தெரிவித்திருந்தார்.

இந்த கடன் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட வேண்டுமென பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். காரணம், இந்தக் கடனை 1எம்டிபி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுமானால், அந்தக் கடனை அடைக்க அரசாங்கப் பணமும், மக்களின் வரிப் பணமும் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியையும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ளனர்.

தஞ்சோங் ஏற்பாடு செய்த 2 பில்லியன் ரிங்கிட்டை வழங்கிய தனிநபர்கள் யார் யார் என்ற விவரங்களும் வெளியிடப்பட வேண்டும் என்றும் பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு தனியார் நிறுவனமான தஞ்சோங் எவ்வாறு வட்டிக்கு கடன் கொடுத்தது என்ற கேள்வியும் இதனால் இயல்பாகவே பிறந்துள்ளது. காரணம், வங்கிகளும், நிதி நிறுவனங்களும்தான் வட்டிக்குக் கடன் கொடுக்க முடியுமே தவிர தஞ்சோங் போன்ற நிறுவனங்கள் வட்டிக்குக் கடன் கொடுக்க முடியாது அப்படியே கொடுப்பதாக இருந்தாலும் பேங்க் நெகாராவின் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்.

நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்காய்வுக் குழு ஆனந்தகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதி இந்தக் கடன் விவகாரத்தில் அவரது பங்கு என்ன என்பது குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா கூறியிருக்கின்றார்.

புதிதாக எழுந்துள்ள இந்த கேள்விகளாலும், சர்ச்சைகளாலும் 1எம்டிபி கடன் விவகாரத்தில் ஆனந்தகிருஷ்ணனின் பெயர் பலமாக அடிபடத் தொடங்கியுள்ளது.

-இரா.முத்தரசன்