Home அவசியம் படிக்க வேண்டியவை அஸ்ட்ரோவின் “தடம்” – தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் உயரிய முயற்சி – தூதர் திருமூர்த்தி பாராட்டு

அஸ்ட்ரோவின் “தடம்” – தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் உயரிய முயற்சி – தூதர் திருமூர்த்தி பாராட்டு

634
0
SHARE
Ad

IMG_9320கோலாலம்பூர், ஏப்ரல் 15 – நேற்று அஸ்ட்ரோவின் ‘தடம்’ என்ற ஆவண விளக்கத் தொலைக்காட்சித் தொடரை அதிகாரபூர்வமாக வெளியிட்டு  அறிமுகப்படுத்திய விழாவில் உரையாற்றிய மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்த முயற்சி இந்தியர்களின், குறிப்பாகத் தமிழர்களின் கடந்தகால வரலாற்றை மீட்டெடுத்து இன்றைய தலைமுறையினருக்கு தொலைக்காட்சி வழி வழங்கும் உயரிய முயற்சி எனப் பாராட்டினார்.

“ஏன் நாம் கடந்தகால வரலாற்றை மீட்டெடுத்துக் காட்ட வேண்டுமென்றால், இன்றைய தலைமுறைகளுக்கு நமது வேர்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதனால், புத்தாண்டான இந்த நன்னாளில் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்றும் திருமூர்த்தி தமிழில் ஆற்றிய தனது உரையில் குறிப்பிட்டார்.

அதே வேளையில் கடந்த காலப் பெருமைகளை மட்டும் பேசிக் கொண்டு அந்த காலத்திலேயே நாம் வாழ்ந்துவிடவும் கூடாது என்றும் திருமூர்த்தி நினைவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

“மாற்றம் ஒன்றுதான் என்றைக்கும் மாறாதது. கடந்த கால சரித்திரங்களை இன்றைய தலைமுறையினர் தடைகளாகப் பார்க்காமல், எதிர்காலத்துக்குரிய உரமாகப் பார்க்க வேண்டும். கடந்த கால வரலாறுகளை நமது தடமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்றும் திருமூர்த்தி கூறினார்.

தமிழர்களின் பெருமைகள், சாதனைகள் குறித்துப் பட்டியலிட்ட இந்தியத் தூதர் “இந்த பழம் பெரும் குணாதிசயங்கள் எல்லாம் சங்க காலத்திலிருந்து தொடர்ந்து தமிழர்களிடத்தில் இன்றுவரை காணப்படுகின்றது” என்றும் குறிப்பிட்டார்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

IMG_9488

“வாழ்க்கையில் தடம் பார்த்து நடப்பவன் மனிதன். ஆனால், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் என்ற அரிய தத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்க வேண்டும். அந்த வகையில் நமது கடந்த காலத் தடங்களை நமக்கு ஆவண விளக்கப் படமாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் அஸ்ட்ரோவுக்கும், அதற்குரிய முயற்சிகளை எடுத்த டாக்டர் ராஜாமணியையும் மிகவும் பாராட்டுகின்றேன்” என்றும் திருமூர்த்தி தனது உரையில் தெரிவித்தார்.

இந்தியத் திருவிழா குறித்த தகவல்களையும், இந்தியத் தூதரகத்தின் மற்ற பணிகளையும் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க உதவி புரிந்த அஸ்ட்ரோவினருக்கும், தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அதன் தலைமைச் செயலாக்க அதிகாரி ஹென்ரி டான்னுக்கும், டாக்டர் ராஜாமணிக்கும் இந்தியத் தூதரகத்தின் சார்பில் தனது நன்றியையும், திருமூர்த்தி புலப்படுத்திக் கொண்டார்.