Home கலை உலகம் பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா மரணம்!

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா மரணம்!

655
0
SHARE
Ad

raja-sulochan-asliderசென்னை, மார்ச்.5- பழம் பெரும் நடிகை ராஜசுலோச்சனா இன்று (மார்ச் 5) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77. அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்த ராஜசுலோச்சனா. அவ்வப்போது இந்தியா வருவார்.

மடிப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் தங்குவார். இந்த முறை அவர் வந்தபோது கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் உள்ள அவரது மகன் மற்றும் மறுமகள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை மதியம் அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. தற்போது மடிப்பாக்கம் ராம்நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஆந்திர திரையுலக பிரமுகர்கள் சென்னை விரைந்து கொண்டிருக்கிறார்கள்

ராஜசுலோச்சனாவின் வாழ்க்கை குறிப்பு:-

ராஜசுலோச்சனாவுக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் பூர்வீகம். சென்னையில் நடனம் கற்க வந்தவர் 16 வயதில்  ஏவிஎம் நிறுவனத்தின் கம்பெனி நடிகையானார். ஏவிஎம் தயாரித்த சத்தியசோதனை என்ற படத்தில் அறிமுகமானார்.

அரசிளங்குமரி, ராஜாராணி, ரங்கோன் ராதா, நல்லவன் வாழ்வான், சேரன் செங்குட்டுவன், குலேபகாவலி உள்பட 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழில் அம்மா வேடங்களில் நடித்தார்.

சிம்பு நடித்த “எங்க வீட்டு வேலன்”தான் அவர் நடித்த கடைசிப் படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனர் சி.புல்லையாவின் மகன் ராவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள்  உள்ளனர். மூன்று பேருமே அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

25 வருடங்களுக்குப் முன்பு அமெரிகாவில் குடியேறிய ராஜசுலோச்சனா அங்கு நடனப் பள்ளிகளை நடத்தி வந்தார். அந்த நாட்டின் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தார்.

அவ்வப்போது இந்தியா வந்து செல்வார். சென்னை மடிப்பாக்கத்தில் தனக்கென்று ஒரு வீடு கட்டிக்கொண்டு அங்கு தனியாக வசித்து வந்தார். சென்னை வரும்போது அந்த வீட்டில்தான் தங்குவார்.

பல்வேறு சமூக அமைப்புகளில் பொறுப்பு வகித்து மக்களுக்கு சேவை செய்து வந்தார். தன் உடல் நலம் நன்றாக இருக்கும் வரை தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டும் நடனம் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தார்.