Home நாடு ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் 5 முறை கேட்ட வெடிச்சத்தம்: காவல்துறை தகவல்

ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் 5 முறை கேட்ட வெடிச்சத்தம்: காவல்துறை தகவல்

620
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 3 – கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியின் போது 5 முறை வெடிச்சத்தம் கேட்டதால்
பரபரப்பு நிலவியது. எனினும் பட்டாசுகள் வெடித்ததாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளாலும் (Smoke B0mbs) இச்சத்தம் கேட்டதாக நகர காவல்துறை மூத்த தலைமை துணை ஆணையர் டத்தோ தாஜுதின் முகமட் ஈசா தெரிவித்துள்ளார்.

GST Protests 1 May 2015டத்தாரான் மெர்டேக்காவிலிருந்து கேஎல்சிசி வரை நீடித்த இந்தப்
பேரணியின்போது, சோகோ (SOGO) வளாகத்தின் முன்னே அமைந்துள்ள பண்டாராயா எல்ஆர்டி நிலையம் முன்பு மாலை சுமார் 3.12 மணி முதல் 3.16 வரைக்குள் அடுத்தடுத்து 4 வெடிச்சத்தங்கள் கேட்டன.

இதையடுத்து 3.25 மணிக்கு அடுத்த வெடிச்சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “இந்தப் பேரணியின்போது பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. எனினும் போராட்டக்காரர்கள் பல்வேறு குற்றங்களில், அத்துமீறல்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சிலர் பேரணிக்கு தங்களது குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்” என்று டத்தோ தாஜுதின் முகமட் ஈசா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பேரணியின்போது யாரும் கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், நடந்த சம்பவங்கள் குறித்து காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.

“காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்றது என்பதால் நிச்சயமாக இது சட்டவிரோதப் பேரணிதான். பாடாங் மெர்போக்கை பயன்படுத்துமாறு நாங்கள் கூறியும், ஏற்பாட்டாளர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். போராட்டக்காரர்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தும் புகைப்படங்களாகவும் காணொளியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கு அவற்றைப் பயன்படுத்துவோம்,” என்று டத்தோ தாஜுதின் முகமட் ஈசா மேலும் தெரிவித்துள்ளார்.

படம்: EPA