Home தொழில் நுட்பம் விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்!

விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்!

531
0
SHARE
Ad

windows_10கோலாலம்பூர், மே 9 – விண்டோஸ் 10 தான் மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம் என்ற அறிவிப்பு, தற்போது தொழில்நுட்ப வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால், மைக்ரோசாப்ட் இனி இயங்குதளங்களை உருவாக்காதா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?  இதற்கான பதிலை மைக்ரோசாப்ட் நிறுவனமே அளித்துள்ளது.

சமீபத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்நைட்’ (Ignite) கூட்டம் சிகாகோவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஜெர்ரி நிக்சன், “விண்டோஸ் 10 தான் மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம். நிறுவனம், விண்டோஸ் 10 வெளியீட்டிற்குப் பிறகு புதிய இயங்குதளங்களை உருவாக்காது. விண்டோஸ் 10 தான் கடைசி என்பதால், அதன் சிறப்பான வெளியீட்டிற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை மேம்படுத்தாது என்ற செய்தி பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் கூறுகையில், “புதிய இயங்குதளங்களை உருவாக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், புதிய மேம்பாடுகள் அனைத்தும் விண்டோஸ் 10 பெயரிலேயே உருவாக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் 8-ன் மேம்பாடு விண்டோஸ் 8.1 என வெளியானது. ஆனால், இனி அத்தகைய வெளியீடுகள் இருக்காது” என்று தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

கணினி முதல் திறன்பேசி வரை விண்டோஸ் 10 இயங்குதளத்தை அனைத்து கருவிகளிலும் மேம்படுத்த முடியும் என்பதால், விண்டோஸ் 10-க்கு மிகப் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கணினிக்கான இயங்குதளம் இந்த மாத இறுதியிலும், மற்ற கருவிகளுக்கான இயங்குதளம் இந்த ஆண்டின் இறுதியிலும் வெளியாகும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.