Home கலை உலகம் முதல்நாள் திரைவிமர்சனம்: ‘பாண்டிய நாடு’ – வித்தியாச விஷால்; கலக்கும் பாரதிராஜா; சுசீந்திரனின் வெற்றிக் கூட்டணி!

முதல்நாள் திரைவிமர்சனம்: ‘பாண்டிய நாடு’ – வித்தியாச விஷால்; கலக்கும் பாரதிராஜா; சுசீந்திரனின் வெற்றிக் கூட்டணி!

653
0
SHARE
Ad

#TamilSchoolmychoice

Pandiya-Nadu-Featureநவம்பர் 3 – இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் படமாக ஆரம்பம் வெளியாக, இரண்டாவது படமாக வெளிவந்துள்ள படம் விஷாலின் தயாரிப்பில், சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பாண்டிய நாடு.

தொடர்ந்து வெற்றிப் படங்களாக தந்து தன்னை ஒரு முன்னணி இயக்குநராக அடையாளம் காட்டிக் கொண்ட இயக்குநர் சுசீந்திரன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ராஜபாட்டை படத்தில் மட்டும் சற்றே சறுக்கினார். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அண்மையில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் தனது திறனை மீண்டும் நிரூபித்தார்.

இப்போது, மற்றொரு வித்தியாச படைப்பாக பாண்டிய நாடு படத்தைத் தந்து மற்றுமொருமுறை தனது திறனை நிரூபித்துள்ளார் சுசீந்திரன்.

மதுரையைக் குறிக்கும் பெயர்தான் பாண்டிய நாடு’. வழக்கமான குண்டர் கும்பல்களுக்கிடையிலான கதைதான் அடிப்படை என்றாலும், அந்த குண்டர் கும்பல் பிரச்சனையில் நியாயமான அரசு அதிகாரிகளும், ஒரு சாதாரண குடும்பமும் எப்படி சிக்கிக் கொண்டு அல்லல்படுகின்றார்கள் என்பதைப் படம் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், படத்தின் கதாநாயகனான விஷாலுக்கு வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லை. கடைசி வரை சண்டைக்குப் பயப்படும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். பதட்டப்படும் நேரத்தில் திக்குவாய் வந்துவிடுபவராக வரும் விஷால் அந்த காட்சிகளில் உண்மையிலேயே திக்குவாய்க்காரர் போல், அளவுக்கதிகமாக நடிக்காமல் கச்சிதமாக தனது நடிப்பை வழங்கியிருக்கின்றார்.

இறுதிவரை சண்டைக்குப் பயப்படும் விஷால் கடைசிக் காட்சியில் கூட வழக்கமான நாயகர்கள் போல பாய்ந்து விசுவரூபம் எடுக்காமல், தடுமாறித் தடுமாறி இயல்பாக எதிரிகளைக் கையில் கிடைத்ததை எடுத்து மட்டும் அடிக்கின்றார். இந்த துணிச்சலுக்காக இயக்குநரையும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த விஷாலையும் பாராட்டலாம்.

கொஞ்ச நேரமே விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்துக்கும் முக்கிய காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாக தன்னை முன்னிலைப் படுத்தாத ஒரு படத்தை தானே எடுக்க முன்வந்த விஷாலுக்கு பாராட்டு கூறத்தான் வேண்டும்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாதான் படத்தின் மையம்! தனது மகனுக்கு நேர்ந்த கொடுமையை, அநியாயத்தைக் கண்டு கொதிக்கும் –  ஆனால் எதுவும் செய்ய முடியாத தள்ளாத வயது தந்தையை நமது கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

மகனை இழந்த சோகத்தையும், மகனைக் கொன்றவனைப் பழிவாங்க புறப்படும் தந்தையாகவும், தனது மற்றொரு பரிமாணத்தை காட்டியிருக்கின்றார்.

இதோ, இன்னொரு தந்தை கதாபாத்திரங்களுக்கான நடிகர் தயார்!

படத்தின் கதை

அண்மையில் மதுரை வட்டாரத்தில் கிரானைட் கல் உற்பத்தி ஆலையொன்றில் அனுமதிக்கு மீறி கிரானைட் கல் எடுக்கப்பட்டு அதனை ஒரு அரசு அதிகாரி அம்பலப்படுத்திய செய்தியை மையமாக வைத்து பாண்டிய நாடு எடுக்கப்பட்டிருக்கின்றது.

இடையிடையே, தமிழகத்தின் முந்தைய ஆட்சியின்போது ஒரு அரசியல் தலைவரின் மகன் பற்றிய சர்ச்சைகளும் படத்தைப் பார்க்கும்போது நமக்கு வந்து போகின்றன.

மதுரையின் தாதா – அந்த நகரையே ஆட்டிப் படைக்கும் தலைவன் – காலமாகிவிட, அந்த இடத்திற்கு வர அந்த தாதாவின் இரண்டு கையாட்கள் போட்டியில் இறங்குகின்றார்கள். அந்தப் போட்டியில் பல தலைகள் உருளுகின்றன.

இரண்டு கையாட்களில் ஒருவனை மற்றொருவன் கொன்றுவிட்டு மதுரையின் நிழல் உலக ஆட்சியைக் கைப்பற்ற, அவனது கட்டளைகளை மீறும் அரசாங்க அதிகாரியான விஷாலின் அண்ணனை திட்டமிட்ட கார் விபத்தில் கொன்றுவிடுகின்றார்கள் வில்லன்கள்.

அதனைத் தெரிந்து கொள்ளும் தந்தை பாரதிராஜா செய்வதறியாமல் தவிக்கின்றார். பணத்தைத் திரட்டி, கூலிக்கு கொலை செய்யும் ஒருவனை வில்லனைக் கொல்ல அணுகுகின்றார்.

இன்னொரு பக்கம், அண்ணனுக்கு நேர்ந்த அநியாயத்தைத் தெரிந்து கொள்ளும் விஷால் அதே வில்லனைக் கொல்ல, நண்பன் சூரியுடன் சேர்ந்து திட்டங்கள் தீட்டுகின்றார்.

வில்லனைக் கொல்ல பாரதிராஜாவால் நியமிக்கப்படும் கூலிப் படையினர் தங்களின் முயற்சியில் சொதப்பிவிட, தன்னை கொலை செய்ய திட்டமிட்ட பாரதிராஜாவைக் கண்டுபிடித்துக் கொல்ல வில்லன் தனது கோஷ்டியை ஏவி விடுகின்றான்.

ஒரு கட்டத்தில் தனது தந்தையின் முயற்சி பற்றி தெரிந்து கொள்ளும் விஷால் அடுத்து என்ன செய்கின்றார், வில்லனை எப்படி எதிர்கொள்கின்றார் என்பதை ஒரு பரபரப்பான நாவலைப் போன்று விறுவிறுப்பாக சொல்லி, படத்தின் இரண்டாவது பகுதியைக் கொண்டு செல்கின்றார் சுசீந்திரன்.

படத்தின் சிறப்பம்சங்கள்

எதிர்நீச்சல் படத்தில் தனது மகளை ஓட்டப்பந்தய வீராங்கனையாக காண விரும்பும் அப்பாவித் தந்தையாக வந்த ஷரத் லோஹிட்டாஷ்வா என்ற புதுநடிகர், இந்தப் படத்தின் மைய வில்லனாக விசுவரூபமெடுத்து கலக்கியிருக்கின்றார்.

இனி தமிழ்ப்படங்களுக்கு புதிய வில்லன் முகம் ஒன்று கிடைத்தாகிவிட்டது.

தொய்வில்லாத திரைக்கதையும், இடைவேளைக்குப் பின்னர் கூடும் பரபரப்பும் மர்மமும் படத்தின் மற்ற சிறப்பம்சங்கள்.

படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் திணிக்கப்படாமல் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சூரி நகைச்சுவைப் பகுதிக்காக சேர்க்கப்பட்டிருந்தாலும், தனியாக நகைச்சுவை என்ற பெயரில் எதுவும் செய்யாமல் படத்தின் கதையோட்டத்தோடு இணைந்து பயணித்திருக்கின்றார்.

பல இடங்களில் கதாபாத்திரங்களின் சாதாரண பேச்சுக்களே திரையரங்கில் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக விஷாலின் அண்ணன் மகளாக வரும் அந்த பள்ளிச் சிறுமி பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றார்.

படத்தின் இன்னொரு பலம் பாரதிராஜா!

வயதான – ஆனால் தனது மகனுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு குமுறும் தந்தையாக – வில்லனைப் பழிவாங்குவதற்கு அலையும் தந்தையாக – சிறந்த நடிப்பை பாரதிராஜாவிடம் இருந்து கொண்டு வந்திருக்கின்றார் சுசீந்திரன். இறுதிக் காட்சியில் தனது இளைய மகன் விஷாலைப் பற்றித் தெரிந்து கொண்டு பெருமிதத்தை முகத்தில் தேக்கிக்காட்டுவது பாரதிராஜா நடிப்பின் உச்சம்!

கதாநாயகி இலட்சுமி மேனன் ஆசிரியை பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்தியிருக்கின்றார். அவரது அதிர்ஷ்டம் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிப் படங்களாகவே அமைகின்றன.

ஓரிரு பாடல்களும் இசையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. எல்லா பாடல்களையும் கவிப் பேரரசு வைரமுத்து மதுரை மணம் கமழ எழுதியிருக்கின்றார். ஒத்தக் கடை பாட்டு இனி கொஞ்ச நாட்களுக்கு நேயர் விருப்பமாக வானொலி அலைவரிசைகளில் உலா வரும்.

படத்தின் குறைகள்

விஷாலின் கதாபாத்திரத்தில் வித்தியாசத்தைக் கொண்டு வந்து துணிச்சலைக் காட்டியிருக்கும் இயக்குநர், மற்ற காட்சிகளில் வாய்ப்பிருந்தும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சிக்காமல் பின்வாங்கியுள்ளார்.

குறிப்பாக, கதாநாயகியை வழக்கம்போல் வர்ணித்துப் பாடுவது, கும்பலோடு சேர்ந்து கதாநாயகன் பாடுவது, முக்கால் வாசிப் படத்தில் முக்கியமான திருப்பத்தைப் பரபரப்பாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் காதல் பாட்டு பாடுவது, என சில வழக்கத்தனமான சினிமாத்தனங்களை இயக்குநர் ஏனோ தவிர்க்க முயற்சிக்கவில்லை.

அவற்றையும் தவிர்த்திருந்தால் படம் இன்னும் தரமானதாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில், வித்தியாசமான விஷால், நடிப்பில் கலக்கும் பாரதிராஜா, பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான இயக்கம் – இவற்றுக்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய வெற்றிப் படைப்பு பாண்டிய நாடு’.

-இரா.முத்தரசன்