மார்ச் 24 – இணைய வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் ‘டாங்கோ’ (Tango) செயலியின் 215 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க உள்ளது.
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை (Whats App) 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், ஜப்பானின் ‘ராகுடேன்’ (Rakuten) நிறுவனம் ‘வைபர்’ (viber) செயலியை 900 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் வாங்கிய வரிசையில் அலிபாபா நிறுவனமும் இணைகின்றது.
இந்த வர்த்தகம் குறித்து யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெர்ரி யாங் கூறுகின்ற போது, “டாங்கோ’ (Tango) செயலியின் மூலம் வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதிக வாய்ப்புள்ளதால், அலிபாபா நிறுவனம் பெரிய தொகையை முதலீடாகச் செய்துள்ளது” எனத் தான் கருதுவதாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர் ஆசிய நிறுவனங்கள் இந்தவகைச் செயலிகளின் மீது அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதன் மூலம் இணைய வர்த்தகங்கள் சுலபமாக மக்களைச் சென்றடைகிறது என்றும் யாங் கூறினார்.