கொழும்பு, மார்ச் 24 – சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், என்னை ஆட்சியிலிருந்து அகற்ற, எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என, இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையின் போது,
போர் குற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்த தவறிய இலங்கை அரசை, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. இலங்கையில், போர் நடந்த பகுதிகளில், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.
இது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, ஐ.நா., மனித உரிமை ஆணையத் தலைவர், நவநீதம் பிள்ளை, ஐ.நா.வில், அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில், சர்வதேச மனித உரிமை ஆணையக் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. விரைவில், இலங்கைக்கு எதிராக, இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதுகுறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியதாவது,
இலங்கையில், பயங்கரவாதத்தை ஒழித்ததற்கு தண்டனையாக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், எதிர்கட்சியினர், என்னை ஆட்சியிலிருந்து ஒழிக்கப்பார்க்கிறார்கள்.
மக்களின் மனதை வெல்ல முடியாதவர்கள், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், என்னை கவிழ்க்க பார்க்கிறார்கள். சர்வதேச மனித உரிமை ஆணையத் தலைவர், நவநீதம் பிள்ளை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மூலம், எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
பயங்கரவாதத்தை ஒழித்த எனக்கு, இந்த தண்டனையா? நாங்கள் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக தான் போரிட்டோம்.’இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட வேண்டாம்’ என, மக்கள், சர்வதேச நாடுகளை வலியுறுத்த வேண்டும் என, ராஜபக்சே கூறியுள்ளார்.