இத்திரைப்படத்தை ஜெயிலர், கோட் போன்ற பல வெற்றிப்படங்களின் மலேசிய வினியோகஸ்தர்களான ஃபை ஸ்டார் ட்ரேடிங் (FIVE STAR TRADING) நிறுவனம் சார்பாக டாக்டர் சாய் சுதன் தயாரிக்க, சமூக ஊடங்களில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் சேஜ் ஹீரோஸ் (SAGE HEROES) குழுவின் விஜய் கணேஷ் எழுதி இயக்கியுள்ளார்.
கதைச் சுருக்கம்
படத்தின் பலம் – நடிகர்களின் தேர்வு – நடிப்பு
இத்திரைப்படத்தில் குருஜி கதாபாத்திரத்தில் திரைப்படத்தின் இயக்குனரான விஜய் கணேஷ் மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவரின் உதவியாளராக வரும் சூகுன் கதாபாத்திரத்தின் நடிகையின் தேர்வும் சிறப்பு. கணவன்-மனைவி கதாபாத்திரத்தில் ஜெகன்- நிர்மலா தர்மராஜன், நிர்மலாவின் தம்பியாக ஜோஷூவா மூவரும் அழகாக தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்துள்ளனர்.
திரைக்கதை
இத்திரைப்படத்தின் பெரிய பலம் நாம் வழக்கமாக பார்க்கும் பல பேய் படங்களின் வகையறாவிலிருந்து சற்று மாறுபட்ட திரைக்கதை வடிவத்தை கொடுத்திருப்பதுதான். படத்தின் முதல் பாதியில் திரையரங்கம் முழுவதும் ஒரே சிரிப்புச் சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்க, இரண்டாம் பாதியில் வரும் கதையின் திருப்பம் நம்மை திகைக்க வைக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான பூச்சாண்டி திரைப்படத்திற்கு நிகராக திரைக்கதையின் வடிவமைப்புக்கு இத்திரைப்படத்தையும் தாராளமாக குறிப்பிடலாம்.
தொழில்நுட்பம்
ஹரி கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இத்திரைப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஒரு காட்சியில் இரண்டு வேவ்வேறு இடங்களையும் காலங்களையும் இணைக்கும் படத்தொகுப்பின் யுக்தி அகண்ட திரையில் பார்க்க மிகவும் பிரமிப்பாக உள்ளது. கார்த்திக் வேலசாமியின் கலையும் படத்திற்கு கூடுதல் பலம்.
இவை தவிர மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் இன்னொரு முக்கியமான மைல் கல்லையும் இத்திரைப்படம் அடைந்துள்ளது. வழக்கமாக இந்திய திரைப்படங்களுக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக அமைக்கப்படும் டால்பி அட்மோஸ் (DOLBY ATMOS) ஒலிக்கலவை முதல் முறையாக இந்த மலேசியத் தமிழ்த் திரைப்படத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சேர்க்கை இத்திரைப்படத்தின் திரையரங்கு அனுபவத்தை மேலும் கூட்டியுள்ளது. பூச்சாண்டி திரைப்படத்திற்கு ஒலிக்கலவையும் ஒலித்தொகுப்பும் செய்த ஜேசன் இந்த திரைப்படத்திற்கும் பணிபுரிந்துள்ளார் என்பது கூடுதல் தகவல். ஷேன் எக்ஸ்ட்ரீம் அவர்களின் பின்னணி இசையும் திரைக்கதைக்கு தேவையானத் திகிலையும் பரபரப்பையும் ஆங்காங்கே கொடுக்கத் தவறவில்லை.
படத்தின் பலவீனம்
படத்தில் ஒரு சிறிய பலவீனம் குறிப்பிட வேண்டும் என்றால் இரண்டாம் பாதியின் ஃப்லேஷ்பேக் என்னும் முன் நடந்த காட்சிகளின் நீளத்தைச் சொல்லலாம். அந்த கதைப் பகுதி ஓரளவுக்கு சுவாரசியமாக இருந்தாலும், அதன் நீளத்தைச் சற்று குறைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்புடன் பயணித்திருக்கும்.
இருப்பினும் இத்திரைப்படம் மலேசிய தமிழ்த் திரைப்படங்களில் இன்னொரு முக்கிய மைல் கல் என்று கூறினால் அது மிகையாகாது. முதல் படத்திலேயே ஒரு தரமான கதையுடன் நல்ல திரையனுபவத்தை தந்த இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நிச்சயம் நாம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டும்.
மலேசியத் தமிழர்கள் இத்திரைப்படத்தைக் காண தாராளமாக திரையரங்கு நோக்கிச் செல்லலாம். சிறந்த உள்நாட்டு சினிமாவின் திரையரங்க அனுபவத்தைப் பெறலாம்.
-செல்லியல் திரைப்பட விமர்சனக் குழு
‘மிருகசிரிசம்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: