கோலாலம்பூர்: அண்மையக் காலமாக நாட்டில் ஏற்பட்டு வரும் திடீர் அரசியல் மாற்றங்களில் முக்கியமாகக் கருதப்படுவது எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும், ‘அன்வார் பதவி விலக வேண்டும்’ என்ற கருப்பொருளிலான மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி.
இந்தப் பேரணியில் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்பியக் கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங், முன்னாள் பிரதமர் துன் மகாதீர், பெர்சாத்து தலைவர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின், ஆகியோர் இந்தப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் தேசிய இதயநோய் மருத்துவமனைக் கழகத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதால், பேரணியில் கலந்து கொள்ள அவரின் உடல்நிலை இடம் கொடுக்குமா என்பது தெரியவில்லை. முஹிடின் யாசினும் அண்மையக் காலமாக பொதுநிகழ்ச்சிகளில் அதிகமாகக் கலந்து கொள்வதில்லை. அவரின் உடல் நிலையும் அதற்கான காரணங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அனைவரின் பார்வையும் துன் மகாதீர் பக்கம் திரும்பியுள்ளது. எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதி தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார் மகாதீர். இன்னும் திடகாத்திரமாக இருக்கிறார்.
எனவே, அன்வாருக்கு எதிரான ஜூலை 26 பேரணியில் தன் 100-வது வயதில் கலந்து கொண்டு, மகாதீர் சாதனை படைப்பாரா என்பதைக் காண அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.