ஷா ஆலாம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பதவி விலக வேண்டும் என்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8) சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் அன்வாரின் தலைமையை எதிர்த்து ஷா ஆலாமில் வீதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரிக்கும் விலைவாசி, விரிவுபடுத்தப்பட்ட எஸ்.எஸ்.டி (SST) என்னும் கூடுதல் வரி விதிப்பு, மடானி அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்விகள் என்று அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி இந்தக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெஜூவாங் கட்சியின் ரஃபிக் ரஷீத் அலி, முன்னாள் பிகேஆர் கட்சி உறுப்பினரும் அன்வாரின் முன்னாள் செயலாளருமான எசாம் நோர் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகள் ஆவர்.
ரஃபிக் ரஷீத் அலி, அன்வார் மீது பாலியல் புகார்கள் சுமத்தியுள்ள யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞருமாவார்.
அன்வார் பதவி விலக வேண்டும் என்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி மக்களை ஏமாற்றி விட்டார் என்றும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
இன்றைய பேரணி ஜூலை 26-ஆம் தேதியன்று டத்தாரான் மெர்டேக்காவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ‘அன்வார் பதவி விலக வேண்டும்’ என்ற பிரம்மாண்டமான பேரணியின் முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. ஜூலை 26 பேரணியில் சுமார் 50,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.