வாஷிங்டன்: உலகின் பல நாடுகளுக்கு அதிக வரிவிதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை மீட்டுக் கொண்டு 90 நாட்கள் கால அவகாசத்தைப் பேச்சு வார்த்தைக்காக ஒதுக்கினார். அந்த காலக்கெடு ஜூலை 9-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
நேற்று சனிக்கிழமை (ஜூலை 5) ஊடகத்தினரிடம் உரையாடிய டிரம்ப், அடுத்த கட்டமாக, 12 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்த கடிதங்களைத் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை (7 ஜூலை) அந்தக் கடிதகங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்த 12 நாடுகள் எவை என்பதைத் தெரிவிக்க டிரம்ப் மறுத்து விட்டார்.
அமெரிக்காவின் இந்தப் புதிய முடிவால் உலக நாடுகள் தங்களின் வரவு செலவுத் திட்டங்களையும், நிதிநிலை அறிக்கைகளையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சில நாடுகளுக்கு 50 விழுக்காடு வரையில் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை கடிதம் அனுப்பப்படும் 12 நாடுகளுக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உத்தரவைப் பின்பற்றுங்கள் இல்லாவிட்டால் விட்டு விடுங்கள், மேலும் பேச்சுவார்த்தை கிடையாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.