Home இந்தியா பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு – ‘தமிழுக்காக வாழ்ந்தவர்’ தான்ஶ்ரீ குமரன் இரங்கல்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு – ‘தமிழுக்காக வாழ்ந்தவர்’ தான்ஶ்ரீ குமரன் இரங்கல்

78
0
SHARE
Ad
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜூலை 5) காலை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனார் தமிழ் நாட்டில் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றதாக தான்ஸ்ரீ க.குமரன் குறிப்பிட்டார்.

மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான குமரன் மேலும் கூறுகையில், “வாமுசே அவர்களை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். பன்னாடு தமிழ் உறவு மன்றத்தின் வழி உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து குவலயமெல்லாம் தமிழ்த்தூதுவராக அவரைப்போல உலக வலம் வந்து தமிழ் வளர்த்த ஒருவரை இனி காண்பதரிது. அண்மையில் அவருக்கு நடைபெற்ற தொன்னூறாம் அகவை நிறைவில் அவருடன் அலைபேசிவழி தொடர்புகொண்டு வாழ்த்தினேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவரது ”காலக்கணி” என்ற நூலின் வெளியீட்டிற்கு தலைமையேற்றது நெஞ்சில் பசுமையாக இருக்கிறது” என்று நினைவு கூர்ந்தார்.

1978-இல் ஈப்போவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான்ஶ்ரீ குமரனுடன் வா.மு.சேதுராமன்

“தமிழாசிரியராக வாழ்வைத் தொடாங்கி, தமிழ்த் தொண்டராக பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து, நற்றமிழ் நாவுக்கரசராய், மொழிப் போராளியாய், இன நலன் பேணுபவராய் களத்தில் இறங்கி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதுடன், நாடும் மக்களும் நலனுற நடைப் பயணங்கள் மேற்கொண்ட நற்றமிழ்த் தொண்டர். தமிழினத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை உழுவலன்பராகப் பெற்ற பெருங்கவிக்கோ தமது தொண்டுப் பயணங்களிலும், போராட்டங்களிலும் தமிழை, தமிழ்க் கவிதைகளை மறந்தாரில்லை. நூறாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எண்ணற்ற நூற்களையும் யாத்து தமிழுக்கு அணிசேர்த்தவர்” என்றும் குமரன் வா.மு,சேதுராமனின் சேவைகளுக்குப் புகழாரம் சூட்டினார்.

டான்ஸ்ரீ க.குமரன்
#TamilSchoolmychoice

“உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கவும் தமது உள்ளத்து உணர்வுகளை, தமிழ், தமிழர் சார்ந்த கருத்துக்களை எடுத்தியம்பிடவும் ”தமிழ்ப் பணி” இதழை உலகெலாம் வலம்வர செய்த செந்தமிழ்த் தேனீ பெருங்கவிக்கோ. உலகின் பல நாடுகளில் நடைபெற்ற கவி அரங்குகளில் தமிழில் பாப்பாடி தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்த்தவர் தமிழை உயிராய்க் கொண்டு தமிழ்க்காவலராய் தொண்டாற்றி அமரத்துவம் அடைந்தவர் பெருங்கவிக்கோ.
தன்னலமற்ற தொண்டுக்கு இலக்கணமாய் வாழ்ந்த இனிய நண்பர். பெருங்கவிக்கோ அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் கவிஞர் திருவள்ளுவர், பேராசிரியர் முனைவர் ஆண்டவர், குடும்பத்தினர், அறம்புரி சுற்றத்தினருக்கு  எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் தனது இரங்கல் செய்தியில் தான்ஸ்ரீ குமரன் தெரிவித்தார்.