சென்னை : தமிழ் நாட்டின் சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காமராஜரின் தீவிரத் தொண்டருமான குமரி அனந்தன் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 9) உடல் நலக் குறைவால் காலமானார். அவர் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமாவார். அவருக்கு வயது 93.
தன் இளமைக் காலம் முதல் அரசியலில் காமராஜரின் பெருந் தொண்டராகவும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் செயலாற்றியவர் குமரி அனந்தன். ஆனால் ஒரு மருத்துவரான அவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டார்.
குமரி அனந்தன் மறைவையொட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களின் அனுதாபங்களைப் பதிவு செய்தனர்.
இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் குமரி அனந்தன். அரசியல் மேடைகளில் மட்டுமின்றி, இலக்கியக் கூட்டங்களிலும் அவர் ஏராளமான அளவில் உரையாற்றியிருக்கிறார். மலேசியாவுக்கும் வருகை தந்து அவர் உரைகளை நிகழ்த்தியுள்ளார். நிறைய நூல்களையும் குமரி அனந்தன் எழுதியுள்ளார். எப்படி சிறந்த முறையில் மேடையில் உரையாற்றுவது என்பது குறித்தும் அவர் நூல் எழுதியுள்ளார். சுமார் 29 தமிழ் நூல்களை அவர் படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் குமரி என்ற அடைமொழியை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். தன் வாழ்நாள் முழுக்க மது ஒழிப்புக்காகவும் போராடியவர் குமரி அனந்தன்.
அவரின் இளைய சகோதரர் வசந்தகுமாரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ் நாட்டின் பிரபல வணிக நிறுவனமாக வசந்த் அண்ட் கோ’வின் உரிமையாளர் வசந்தகுமார் ஆவார்.
குமரி அனந்தன் நல்லுடலுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழிசை சௌந்தரராஜனுக்கும் தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
தன் தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சவுந்தரராஜன், “என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு. தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது” எனக் குறிப்பிட்டார்.