(தமிழகத்தின் நீண்ட கால அரசியல் போராளி என்றாலும், குமரி அனந்தனின் தமிழ்ப் பணிகளும், எழுத்துப் படைப்புகளும், அவரது மேடைத் தமிழ் அழகும் இன்றும் அனைவராலும் பாராட்டுகளைப் பெறும் அம்சங்கள். இன்று மார்ச் 19-ஆம் தேதி 88-ஆம் அகவையை எட்டும் அவரது தமிழ்ப் பணிகளை நினைவு கூரும் இந்தக் கட்டுரையை மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதியுள்ளார்)
தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே என்பவர் வழிநடத்தும் சாணக்கியா இணையத் தொலைக்காட்சி சார்பில் அண்மையில் மூன்று சான்றோர்களுக்கு அவர்களின் பணிகளுக்காக சிறப்பு செய்தது.
அவர்களில் குமரி அனந்தனும் ஒருவர். பாஜகவின் இல.கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் அந்த சிறப்பைப் பெற்ற மற்ற இருவர்.
அந்த நிகழ்ச்சியின் வழி அப்போது பணமுடிப்பாக அளிக்கப்பட்ட ஒரு இலட்ச ரூபாயை குமரி அனந்தனின் பெருமை, வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவரிடம் நேரில் ஒப்படைக்காமல் குமரி அனந்தன் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது இன்னும் சிறப்புடையது.
பனை மரத்து ஓலையில் பெயர் அட்டை(Name Card)யைப் பயன்படுத்துவோரில் குமரி அனந்தனும் ஒருவர். இன்று மார்ச் 19-இல் 88 அகவையை எட்டும் இவருக்கு பல அடையாளங்கள் உண்டு.
தலைப் பிள்ளையைப் பெற்றெடுத்த இளந்தாய், தொட்டிலில் அழுத குழந்தைக்குப் பாலூட்டிய பின்னும் அது அழுகையைத் தொடர்ந்தால், குழந்தையைத் தாலாட்டி தூங்க வைக்க எண்ணுவாள். கடந்த ஆண்டில் கன்னியாக இருந்த இவள், மணம் முடித்த நிலையில் இந்த ஆண்டு தாயாகி விட்டாள். இளம் பெண் என்பதால் தாலாட்டு பாடத் தெரியவில்லை.
ஆனாலும் அழுகின்ற குழந்தையை அமைதிப்படுத்த வேண்டுமே என்ற நோக்கத்தில் ஆரீரரோ ஆரீரரோ என்று மெல்லிய குரலில் பாடுவாள். குழந்தையின் கண்களை தூக்கம் தழுவவில்லை. உடனே, சற்று சத்தமாக ரா ரா ரா என்று பாடுவாள். அடுத்து லா லா லா என்று வேறு விதமாகப் பாடுவாள். குழந்தை மெல்ல உறங்கத் தொடங்கும்.
ஆரீராரோ என்ற சொல்லுக்கோ ரா ரா ரா என்பதற்கோ அல்லது லா லா லா என்பதற்கோ தமிழில் பொருள் இல்லை. நாவினால் வெறுமனே உச்சரிக்கும் ஓசைதான். நாக்கிற்கு தால் என்றும் பெயர். அந்தத் தாலைக் கொண்டு ஆட்டுவதால் ரா ரா ரா என்றும் லா லா லா என்றும் தோன்றும் இன்னோசை குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைக்கும்.
இவ்வாறு தாலால்(நாவால்) ஆட்டுவதால்தான், அதற்கு தாலாட்டென பெயர் வந்தது என்று சில ஆண்டுகளுக்கு முன் தலைநகரத்து டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் இலக்கிய உரை நிகழ்த்தியபோது இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் பேசினார்.
இலக்கிய சிந்தனையாளர் அல்லது இலக்கியப் பேச்சாளர் என்பதுதான் குமரி அனந்தனுக்கு முதல் அடையாளம். பழம்பெரும் காந்தியவாதியான இவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவர் என்பது அடுத்த அடையாளம். அந்த இயக்கத்துடன் மாறுபாடு கொண்டு புதுக்கட்சியைத் தொடங்கியபோதுகூட, ‘காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்’(கா.கா.தே.கா.) என்று பெயரிட்டு காங்கிரஸ் வட்டத்திற்குள்ளேயே நின்றார்.
பனை மரத் தொழிலாளர்கள் வாழ்வில் நலம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தம் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து வரும் இவர், அதனால்தான் பனை மரத்து ஓலையிலான பெயரட்டையைப் பயன்படுத்தி வருகிறார். அதை ஊக்குவித்தும் வரும் இவர், பனையேறித் தொழிலாளர்களுக்காக நீண்ட கால்நடைப் பயணத்தையும் மேற்கொண்டார். அதைப்போல நதிநீர் இணைப்பிற்காகவும் புதுவை மாந்தோப்பை பாரதி குயில்தோப்பாக மாற்ற வேண்டும் என்றும் பாரத மாதாவிற்கு சிலை எழுப்ப வேண்டும் எனவும் கால்நடைப் பயணங்களை பல கட்டங்களில் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு, பொது நலனுக்காக கால்நடைப் பயணம் மேற்கொண்டது குமரி அனந்தனின் இன்னோர் அடையாளம்.
பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய இவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக காங்கிரசிற்கு தலைவராகவும் செயல்பட்ட இவருக்கு அரசியல்வாதி என்பது மற்றுமோர் அடையாளம்.
காங்கிரஸ் இயக்கப் பின்னணியிலேயே வளர்ந்த தன்னுடைய மகள் மருத்துவர் தமிழிசை, மருத்துவர் சௌந்தரராஜனை மணம் முடித்த நிலையில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆனார். அப்படிப்பட்ட தமிழிசை, பாஜக-வில் இணைந்தபோது தாளவொண்ணாத் துயருக்கு ஆளானார் குமரி அனந்தன். ஆனாலும், தமிழிசை இன்று ஒரு மாநிலத்தின் (தெலுங்கானா) ஆளுநராகத் திகழ்கிறார்.
காங்கிரஸ் இயக்கத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த குமரி அனந்தனை, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை கண்டு கொள்ளவே இல்லை. தன்னால் எட்டமுடியாத உயரத்தை தன் மகள் பெற்றுவிட்ட நிலையில், ஒரு தந்தை என்பதில் அவருக்கு நிச்சயமாக மகிழ்ச்சிதான். மகள் மாற்று முகாமில் இருந்தாலும் ஓர் ஆளுநரின் தந்தை என்பது குமரி அனந்தனுக்கு வேறோர் அடையாளம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிமங்கலம் என்னும் ஊரில் அனந்த கிருட்டிணன் என்னும் இயற்பெயருடன் 1933-இல் பிறந்த குமரி அனந்தன் அரசியலில் தூய்மை நெறியில் வாழ்பவர்.
அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து, அவரது தமிழ்ப் பணிகளும் இனிதே தொடர வேண்டும் என வாழ்த்துவோம்.