தாய்லாந்துக்குப் புதிய பிரதமர்! அன்வாருக்கு சிக்கலா?
பாங்காக்: தாய்லாந்தின் பூம்ஜாய்தாய் கட்சியின் தலைவர் அனுதின் சார்ன்விராகுல் அந்நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆசியான் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஆசியான் நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் அரசியல் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதில்லை. எனினும் தாய்லாந்தின் பிரதமராக பாதேங்தோர்ன்தாம் ஷினவாத்ரா கடந்த ஆகஸ்ட் 2024-இல் பிரதமரானது முதல் அன்வார் இப்ராகிம் அவருடன் நெருக்கம் பாராட்டி வந்தார். அவருடன் பல சந்திப்புகளையும் நடத்தினார். பாதேங்தோர்ன்தாம் ஷினவாத்ராவின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தக்ஷின் ஷினவாத்ராவை ஆசியானுக்கான ஆலோசகராகவும் அன்வார் நியமித்தார். அந்த நியமனம் சில சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதேங்தோர்ன்தாம் ஷினவாத்ரா பிரதமராக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக அனுதின் சார்ன்விராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அன்வார் தாய்லாந்துடனான நல்லுறவுகளை மீண்டும் ஆரம்பம் முதல் தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
58 வயதான அனுதின் சார்ன்விராகுல் செப்டம்பர் 5-ஆம் தேதி தாய்லாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பொறியியல் வல்லுநரான அனுதின் தாய்லாந்தின் முன்னாள் துணைப் பிரதமராவார். உள்துறை, சுகாதார அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். அவரின் தந்தையும் ஒரு முன்னாள் அமைச்சராவார்.
கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் அவரின் குடும்ப நிறுவனத்தின் மூலம் மிகப் பெரிய பணக்காரராகவும் அனுதின் திகழ்கிறார்.


