கோலாலம்பூர் – வரும் டிசம்பர் 13-ம் தேதி, கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் புதிய மாமன்னர் பதவி ஏற்கவுள்ள சடங்கில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கும், அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவிற்கும் விடுக்கப்பட்டிருந்த அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுல்தானின் முத்திரையுடனும், காப்பாளர் சையட் டேனியல் சையட் அகமட் கையெழுத்தும் கொண்ட அக்கடிதம் நேற்று புதன்கிழமை முதல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றது.
புத்ராஜெயாவிலுள்ள பெர்டானா தலைமைத்துவ அறவாரிய அலுவலகத்திற்கு டிசம்பர் 5-ம் தேதியிட்ட அக்கடிதம், நேற்று நேரடியாக வந்து கொடுக்கப்பட்டதாக மகாதீரின் உதவியாளர் உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் மகாதீர் அமர இருக்கை வழங்கப்படவில்லை என்பதால், அவருக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்று முன்பே இக்கடிதத்தை அனுப்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 13-ம் தேதி, மலேசியாவின் 15-வது பேரரசராக, மேன்மை தங்கிய கிளந்தான் சுல்தான் முகமட் பதவி ஏற்கிறார்.
நடப்பு பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் (கெடா சுல்தான்) 5 ஆண்டு கால பதவிக்காலம் வரும் டிசம்பர் 12-ம் தேதியோடு நிறைவடைவதால், கடந்த அக்டோபர் 14-ம் தேதி, சுல்தான்கள் கூடி, புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.