Home நாடு ஆயர் கூனிங்: பவானிக்கான வாக்குகளில் இந்தியர்களின் அதிருப்திகள் பிரதிபலிக்குமா?

ஆயர் கூனிங்: பவானிக்கான வாக்குகளில் இந்தியர்களின் அதிருப்திகள் பிரதிபலிக்குமா?

76
0
SHARE
Ad
தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பாக்கிர் – கே.எஸ்.பவானி -பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் பாஸ் கட்சியின் அப்துல் முஹாய்மின் மாலிக் (வயது 43)

தாப்பா: இன்று சனிக்கிழமை ஏப்ரல் 26 நடைபெறும் ஆயர்கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டும் வெற்றி பெறும் என்ற கண்ணோட்டம் நிலவினாலும், அனைத்து அரசியல் பார்வையாளர்களின் உள்ளங்களிலும் ஒளிந்திருக்கும் கேள்வி பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் கே.எஸ்.பவானிக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதுதான்!

பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி – இரு தரப்புகளுமே இஸ்லாமியக் கல்வி பெற்ற வலிமையான மலாய் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. இதனால் மலாய் வாக்குகள் பிஎஸ்எம் கட்சி பக்கம் செல்ல வாய்ப்பில்லை.

பவானி கே.எஸ்.

ஆயர்கூனிங் தேர்தல் களத்தில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கும் கே.எஸ்.பவானிக்கு இந்தியர்கள், சீனர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புண்டு. இந்தியர்களில் பெரும்பான்மை வாக்குகள் தேசிய முன்னணிக்கே கிடைக்கும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறுகிறார். தனது பிரச்சாரங்களின் மூலம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவிதுள்ளார்.

#TamilSchoolmychoice

சீனர்கள் தங்களுக்கிருக்கும் அதிருப்தி, அண்மையில் மலேசியக் கொடி விவகாரத்துக்காக சின் சியூ ஜிட் போ சீனப் பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது ஆகிய காரணங்களுக்காக அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்க மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.

தேசிய முன்னணி வேட்பாளருடன் டத்தோஸ்ரீ எம்.சரவணன்

இந்நிலையில் பவானிக்கு 5 ஆயிரம் வாக்குகள் கிடைக்கலாம் – அந்த அளவுக்கு கடுமையாக அவர் உழைத்திருக்கிறார் என ஆயர் கூனிங் இடைத் தேர்தலை அணுக்கமாகக் கண்காணித்து வரும் சிலர் கூறுகின்றனர். உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமியும் (பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர்) அவரின் அணியினரும் பவானிக்கு பிரச்சாரக் களத்தில் பெருமளவில் உதவி புரிந்துள்ளனர்.

இந்நிலையில் பவானிக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்தியர்களின் அதிருப்திகளைப் பிரதிபலிக்கும் எனக் கருதப்படுகிறது. அதிகமாக வாக்குகளை அவர் ஈர்த்தால் – அந்த வாக்குகள் தேசிய முன்னணிக்கே செல்லக் கூடியவை என்பதால் – அந்தப் பிளவு காரணமாக, பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சொற்ப வாக்குகளில் வெல்லக் கூடிய சாத்தியத்தையும் நாம் மறந்து விடக் கூடாது.