Home நாடு ஆயர் கூனிங்: இந்தியர்களின் நம்பிக்கை இன்னும் தேசிய முன்னணி – பக்காத்தான் பக்கமே!

ஆயர் கூனிங்: இந்தியர்களின் நம்பிக்கை இன்னும் தேசிய முன்னணி – பக்காத்தான் பக்கமே!

151
0
SHARE
Ad

(ஏப்ரல் 26-ஆம் நாள் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலின் முடிவுகள் காட்டுவது என்ன? இந்தியர் வாக்குகளை மடானி ஒற்றுமை அரசாங்கம் இழந்ததா? தனது பார்வையை வழங்குகிறார் செல்லியல் ஆசிரியர் இரா.முத்தரசன்)  

  • இந்தியர்களின் அதிருப்தி வாக்குகளை எதிர்க்கட்சிகளால் ஈர்க்க முடியவில்லை!
  • ஆயர் கூனிங் வெற்றிக்குத் துணைபுரிந்த சரவணனின் பிரச்சாரங்கள்!
  • தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாரப்பான் இணைப்பால் ஏற்படும் அரசியல் வலிமை மீண்டும் நிரூபணம்!
  • பிஎஸ்எம் கட்சி எதிர்கால வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும்!

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற  ஆயர்கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டும் வெற்றி பெற்றிருப்பது பல அரசியல் கணக்குகளை – எதிர்பார்ப்புகளை – பொய்யாக்கியிருக்கிறது.

இந்தியர்களைப் பொறுத்தவரை அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்திற்கு அவர்கள் ஆதரவு தரவில்லை – அடுத்த பொதுத் தேர்தலில் அன்வாருக்கு இந்தியர்கள் ஆதரவு தர மாட்டார்கள் – என்றெல்லாம் கூறப்பட்டு வந்தன. அண்மைய தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சனையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்து ஆலயப் பிரச்சனைகளும் அதற்குக் காரணங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால், ஆயர் கூனிங் இடைத் தேர்தல் முடிவுகள் அத்தகைய கண்ணோட்டங்களைப் பிரதிபலிக்கவில்லை.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிகள் இணைந்த மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான, இந்திய சமூகத்தின் நம்பிக்கை இன்னும் தேயவில்லை – குலையவில்லை – என்பதையே ஆயர் கூனிங் இடைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி – இரு தரப்புகளுமே இஸ்லாமியக் கல்வி பெற்ற வலிமையான மலாய் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையிலும் இந்திய வாக்குகள் பிஎஸ்எம் கட்சியின் கே.எஸ்.பவானி பக்கம் திரும்பவில்லை.

வெற்றிக்குத் துணை புரிந்த
சரவணனின் பிரச்சாரங்கள்

இந்தியர் வாக்குகளை தேசிய முன்னணி பக்கமே மீண்டும் நிலை நிறுத்தியதில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். அவரே, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய, தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் – என்பது ஒருபுறமிருக்க – மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் என்ற முறையிலும் – அவர் ஆயர் கூனிங் தொகுதியில் தனது ஆதரவாளர்களோடு களமிறங்கிப் பணியாற்றினார்.

இதன் மூலம் மஇகாவின் தோற்றத்தையும், தேசிய முன்னணியில் உறுப்பியக் கட்சியாக அதன் முக்கியத்துவத்தையும் சரவணன் நிலை நிறுத்தியிருக்கிறார்.

சீனர்கள் தங்களுக்கிருக்கும் சில அதிருப்திகள் – அண்மையில் மலேசியக் கொடி விவகாரத்துக்காக சின் சியூ ஜிட் போ சீனப் பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது – ஆகிய காரணங்களுக்காக அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்க மாட்டார்கள் என்றே கருதப்பட்டது. அவர்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும் – வந்து வாக்களித்த சீன வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.

தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பாக்கிர் – கே.எஸ்.பவானி -பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் பாஸ் கட்சியின் அப்துல் முஹாய்மின் மாலிக் (வயது 43)

பவானிக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்திய சமூகத்தின்  அதிருப்திகளைப் பிரதிபலிக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஒரு கட்சியாகப் போட்டியிட்டும் – உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் இராமசாமி போன்ற இந்திய அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றும் – பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் பவானி சுமார் 1,000 வாக்குகளையே பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்தியர்கள், ஓர் இந்திய வேட்பாளர் என்பதற்காக மட்டும் கண்ணை மூடிக் கொண்டு யாரையும் ஆதரிக்கமாட்டார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.

தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் இணைந்த வலிமை

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு மற்றொரு முக்கியக் காரணம், பக்காத்தான் ஹாரப்பான், தேசிய முன்னணி இணைந்ததால் கிடைக்கும் அரசியல் வலிமை!

இரண்டு கூட்டணிகளின் உறுப்பியக் கட்சிகள், மலேசிய அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் நீண்ட கால அனுபவம் பெற்றவை. 2022 வரை அவர்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டாலும், அதற்குப் பின்னர் அவர்கள் – மடானி ஒற்றுமை அரசாங்கமாக – இணைந்து களம் கண்ட இடைத் தேர்தல்களிலும், மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் அவர்களுக்கு பெரும்பான்மை அளவில் வெற்றியே கிடைத்திருக்கின்றன.

தேசிய முன்னணி-பக்காத்தான் இணைப்பால் அடிமட்ட ஆதரவாளர்களிடையே சில கருத்து பேதங்கள் – முரண்பாடுகள் நிலவினாலும், பெருமளவில் அவர்களின் கூட்டணி அவர்களுக்கு சாதகமான வெற்றிகளையே பதிவு செய்திருக்கிறது.

தேசிய முன்னணி வேட்பாளருடன் டத்தோஸ்ரீ எம்.சரவணன்

ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் 60.7 விழுக்காட்டு வாக்குகளை தேசிய முன்னணி பெற்று வெற்றி வாகை சூடியது. தேசிய முன்னணி வேட்பாளர் யூஸ்ரி பாக்கிர் 11,065 வாக்குகள் பெற்ற நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் அப்துல் முஹாய்மின் மாலிக் (பாஸ்) 6,059 வாக்குகள் பெற்றார். பிஎஸ்எம் கட்சியின் கே.எஸ்.பவானி 1,106 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தேசிய முன்னணி வேட்பாளர் 5006 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலைவிட இந்த முறை தேசிய முன்னணியின் பெரும்பான்மை வாக்குகள் ஏறத்தாழ இருமடங்கு அதிகரித்திருக்கின்றன.

பெரிக்காத்தானின் வாக்கு வங்கி 33.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தாலும் அந்தக் கூட்டணி தோல்வியைக் கண்டது. அதிருப்தி வாக்காளர்களை தங்கள் பக்கம் திருப்புவதற்கான அரசியல் வியூகங்களை பெரிக்காத்தான் கொண்டிருக்கவில்லை. மேல்மட்டத்தில் அந்தக் கூட்டணியின் பலவீனமான தலைமைத்துவம் இன்னொரு காரணம்!

முஹிடின் யாசின், உடல் நலக் குறைவு, முதுமை, ஊழல் வழக்குகள் ஆகியவை காரணமாக, வலிமையான தலைமைத்துவத்தைக் களத்தில் காட்ட இயலாத நிலையில் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அன்வார் இப்ராகிம் வெளிப்படுத்தியது போன்ற சுறுசுறுப்பையும், கடும் உழைப்பையும் முஹிடினால் காட்ட முடியவில்லை. கூடியவிரைவில் அவர் பதவி விலகி, டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் பெர்சாத்து கட்சிக்கும், பெரிக்காத்தான் கூட்டணிக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றால், பெரிக்காத்தான் கூட்டணி, பெர்சாத்து கட்சி ஆகியவற்றின் தோற்றம் மாறலாம்! மாற்று வியூகங்கள் வகுக்கப்படலாம்!

பிஎஸ்எம் கட்சி, எதிர்கால வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும்!

பிஎஸ்எம் கட்சி, ஒரு வழக்கறிஞரும் வலிமையான வேட்பாளருமான கே.எஸ்.பவானியை நிறுத்தியும், 1,106 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பதை வைத்து, தங்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து அந்தக் கட்சி சிந்திக்க வேண்டும் – மாற்றியமைக்க வேண்டும்.

பிஎஸ்எம் கட்சி வேட்பாளர் பவானி

பிஎஸ்எம் 6 விழுக்காட்டு வாக்குகளை மட்டுமே பெற்று ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் வைப்புத் தொகையை இழந்திருக்கிறது. தமிழ் நாட்டின் சீமான் கட்சியான நாம் தமிழர் கட்சிபோல பிஎஸ்எம் மாறிவிடக் கூடாது. வாக்கு வங்கி உயர்கிறது – இளைஞர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் – மாற்று சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறோம் – என்றெல்லாம் நடைமுறை அரசியலுக்கு உதவாத வெற்று அறைகூவல்களை விடுத்துக் கொண்டு, தனித்த கட்சியாகத் தேர்தலில் போட்டியிட்டு – வைப்புத் தொகையை இழப்பது, விவேகமான அரசியல் அல்ல!

ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்து ஓரிரு சட்டமன்றம், நாடாளுமன்றத் தொகுதிகளைப் பெற்று – தங்களின் இருப்பை நிலைநிறுத்தி – அரசியல் பயணத்தைத் தொடர்வதுதான் அந்தக் கட்சிக்கான எதிர்கால வியூகமாக மாற வேண்டும்!

2008 பொதுத் தேர்தலின்போது பிகேஆர் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பிகேஆர் சின்னத்திலேயே போட்டியிட்டு, சுங்கை சிப்புட் தொகுதியில் ஆனானப்பட்ட துன் சாமிவேலுவையே தோற்கடித்த வரலாற்றை பிஎஸ்எம் கட்சி மறந்து விடக் கூடாது.

தேசிய முன்னணி-பக்காத்தான் வாக்கு வங்கி சரிந்ததா?

ஒரு சில அரசியல் பார்வையாளர்கள், ஆயர் கூனிங் வெற்றி தேசிய முன்னணியும், பக்காத்தானும் கொண்டாடப்படக் கூடிய ஒன்றல்ல! மாறாக, அவர்கள் கவலைப் பட வேண்டிய ஒன்று எனத் தெரிவித்துள்ளனர். 2022 பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான போட்டியில் தேசிய முன்னணி 38.7 விழுக்காடு வாக்குகளையும், பக்காத்தான் 29.3 விழுக்காடு வாக்குகளையும் பெற்றன. இரண்டையும் கூட்டினால் அவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் 68 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றனர் – ஆனால் இந்த முறை அவர்கள் இருவரும் இணைந்த மொத்த வாக்கு விழுக்காடு, 60.7 மட்டுமே என அந்த அரசியல் கணிப்பாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதுபோன்ற நுண்ணிய கணக்குகளால் பலனில்லை. ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்கும் வாக்கு விழுக்காடுகள் கண்டிப்பாக மாறுபடும். அதை வைத்து நாம் எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது. தேசிய முன்னணியின் பெரும்பான்மை வித்தியாசம் உயர்ந்தது என்ற சாதகமான அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2022 சட்டமன்றத் தேர்தலில் 74 விழுக்காடு வாக்களிப்பு நடந்த நிலையில் ஏப்ரல் 26 இடைத் தேர்தலில் 58 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவாயின என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. கடந்த பொதுத் தேர்தலை விட, 5.300 வாக்குகள் குறைவாகச் செலுத்தப்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே காரணங்களோடு பார்த்தால், பெரிக்காத்தான் 2022-இல் பெற்ற வாக்குகளை விட 750 வாக்குகள் குறைவாகவே இந்த இடைத் தேர்தலில் பெற்றுள்ளது. ஆனால் 2022-இல் 29 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு வங்கி இந்த முறை 33.2 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. வாக்குகள் அதிகரிப்பது ஒரு கட்சியின் ஆதரவை எடுத்துக் காட்டினாலும், இறுதியில் தேர்தல் களத்தில் வெற்றிதான் முக்கியம்!

நிறைவாக, தேசிய முன்னணி- பக்காத்தான் கூட்டணிகள் இணையும்போது ஒரு தேர்தல் களத்தில் அவை வலிமை பெற்றுத் திகழ்கின்றன என்பதையே ஆயர் கூனிங் இடைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கிளந்தானின் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற வெற்றியையையும் இதனுடன் ஒப்பிடலாம்!

எது எப்படியிருப்பினும், ஆயர் கூனிங் இடைத் தேர்தல் முடிவு என்பது, 16-வது பொதுத் தேர்தலைப் பிரதிபலிக்கும் ஓர் அம்சமல்ல!

(இரா.முத்தரசன்)