
புத்ரா ஜெயா: பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி திடீரென விடுமுறையில் சென்றிருப்பதாக அறிவிகப்பட்டிருப்பது பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அவர் பதவி விலகி விட்டார் என்றும் சில ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.
இன்று புதன்கிழமை (ஏப்ரல் 30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை.அவர் அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ விடுமுறையில் இருப்பார் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதிகளுக்கான தேர்தலில் ரபிசியின் ஆதரவாளர்கள் பலர் தோல்வியடைந்தனர் – அல்லது தோற்கடிக்கப்பட்டனர் – என ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான ரபிசி ரம்லி, மே மாதத்தில் நடைபெறவிருக்கும் தேசிய நிலையிலான தேர்தல்களில் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார். இதுவரை அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக யாரும் அறிவிக்கவில்லை.
எனினும், உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் ரபிசியை எதிர்த்துப் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
பிகேஆர் தேர்தலைத் தொடர்ந்து அனைவரின் கவனமும் ரபிசியின் பக்கம் திரும்பியிருக்கிறது.
இதற்கிடையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் ரபிசி விடுமுறையில்தான் இருக்கிறார் என்றும் பதவி விலகவில்லை என்றும் கூறியதாக மலேசியாகினி செய்தி குறிப்பிட்டது.