
தாப்பா: ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுகுறித்துக் கருத்துரைத்த மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், “ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை மீண்டும் தக்கவைக்க முடியும் என நம்புகிறோம். ஆனால், வாக்கு பெரும்பான்மையை அதிகரிப்பது கடினம்” எனத் தெரிவித்தார்.
சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா தொகுதியின் கீழ்வரும் இரண்டு தொகுதிகளில் ஆயர் கூனிங் ஒன்று என்பதால், இடைத் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் முன்னணி வகிக்கிறார்.
ஆயர் கூனிங் தொகுதியில் இருக்கும் சுமார் 14 விழுக்காட்டு இந்திய வாக்குகளை தேசிய முன்னணி ஆதரவாகத் திரட்டும் நோக்கில் அவர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
வாக்கு பெரும்பான்மை வீழ்ச்சி காணும் என்பதற்குக் காரணம், எதிரணியின் வலிமையல்ல, மாறாக, வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க மாட்டார்கள் என்பதே – என அவர் சுட்டிக் காட்டினார்.
அண்மையில் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளை முன்னிட்டு பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் மீண்டும் ஒருமுறை வாக்களிப்பதற்காக மட்டும் தாப்பா திரும்புவது என்பது சிரமம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“அந்த வகையில், கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற 2,313 வாக்குகளின் பெரும்பான்மையை மேலும் அதிகரிப்பது கடினமாக இருக்கலாம். பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் உதவினாலும் இதனை சாதிப்பது கடினம்தான்” என அவர் ஒப்புக் கொண்டார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேராக் சட்டமன்றத்திற்கான போட்டியில், தேசிய முன்னணி, பக்காத்தான் ஹாரப்பான், பெரிக்காத்தான் நேஷனல் என 3 கூட்டணிகளும் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டன.
அப்போது தேசிய முன்னணிக்கு 9,088 வாக்குகளும் பக்காத்தான் கூட்டணிக்கு 6,875 வாக்குகளும் கிடைத்தன. பெரிக்காத்தான் கூட்டணிக்கு 6,812 வாக்குகள் கிடைத்தன. தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாரப்பான் இரண்டு கூட்டணிகளும் ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் இணைந்து ஒரே ஒற்றுமை அரசாங்க அணியாகப் போட்டியிடுவதால், முன்பைவிட கூடுதல் பெரும்பான்மை வாக்குகள் பெற முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பேராக் அம்னோ தலைவரும் மந்திரி பெசாருமான சாரானி முகமட், கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இந்த முறை 18,000 வாக்குகளைப் பெற தாங்கள் குறிவைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரங்களில் தேசிய முன்னணி- பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிகளின் அடித்தள உறுப்பினர்களின் ஆதரவு, ஒத்துழைப்பு குறித்தும் மனிதவளத் துறையின் முன்னாள் அமைச்சருமான சரவணன் கருத்துரைத்தார்.
“தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடையே பிரச்சனையில்லை. ஆனால், அடித்தளத்தில் இன்னும் இந்த இரு கூட்டணிகளின் உறுப்பினர்களும் ஒரேயணியாக திருப்திகரமாகச் செயல்பட முடியவில்லை,” என்றும் சரவணன் கூறினார்.
தேர்தல் ஆணையம், ஏப்ரல் 26ஆம் தேதியை ஆயர் கூனிங் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளாக நிர்ணயித்துள்ளது. முன்வாக்குப் பதிவு ஏப்ரல் 22-ஆம் நாள் நடைபெறும்.
இந்த இடைத்தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் யூஸ்ரி பாக்கிர், பெரிக்காத்தான் நேஷனலின் முஹாய்மின் மாலிக், பிஎஸ்எம் கட்சியின் கே.எஸ். பவானி ஆகியோர் மும்முனைப் போட்டியில் களம் காண்கின்றனர்.