வழக்கமாக இலக்கிய நிகழ்ச்சி என்றால் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே கூடுவார்கள் என்ற நிலை மாறி நிகழ்ச்சி நடைபெற்ற செந்துல் செட்டியார்கள் மண்டபத்தில் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்குத் திரண்டனர்.
இந்த விழாவில் நிகழ்ச்சிகளுக்குஇடையிடையே கவிதைகளும் வாசிக்கப்பட்டன. சிறுமி அங்கே கன்னி பிரேம் ஆனந்த் வழங்கிய கவிதை அனைவரையும் கவர்ந்தது. மற்றொரு கவிதையை பாவலர் கோவதன் படைத்தார்.
முதல் இலக்கிய உரையாக கவிஞர் அ.பெர்னாட்ஷாவின் ‘வள்ளுவன் வழியில் கண்ணதாசன்’ என்ற உரை இடம் பெற்றது.
வள்ளுவரைப் பின்பற்றி கண்ணதாசன் தன் பாடல்களை எவ்வாறு வடிவமைத்தார் என்பது குறித்து பெர்னாட்ஷா உரை நிகழ்த்தினார்.
மற்றொரு இலக்கிய உரையை தமிழகத்தின் திருமதி இந்திரா விஜயலட்சுமி ‘பொழுதுபோக்கு பாடல்களில் சமூகத்தின் பழுது போக்கிய கவியரசர்’ என்ற தலைப்பில் நிகழ்த்தினார். தன் இனிமையான குரலில் கண்ணதாசன் பாடல்களை பாடி அந்தப் பாடல்களின் இலக்கிய நயத்தையும் ஆழ்ந்த பொருளையும் எடுத்துரைத்தார் இந்திரா விஜயலட்சுமி.
மற்றொரு இலக்கிய உரையை தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணன் வழங்கினார். “காலத்தால் அழியாத காவியம் தந்திட்ட கவியரசு கண்ணதாசன்” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக திருமதி தமிழ்வாணி செயல்பட்டார்.
கண்ணதாசன் விழா நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் நடைபெறுவது போல் இலக்கிய, சமூகப் பணியாற்றிய ஐவருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
நாட்டின் பிரபல ஓவியர் லேனா சாதனைத் தலைவர் துன் சாமிவேலு விருது பெற்றார். பல்லாண்டு காலமாக வானொலியில் பணியாற்றி பல வானொலி நாடகங்களையும் சிறந்த வானொலி நிகழ்ச்சிகளையும் ஒலியேற்றிய திரு எல்.ராமன் அவர்களுக்கு மக்கள் தலைவர் தான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் விருது வழங்கப்பட்டது.
தமிழவேள் கோ.சாரங்கபாணி விருதை திருமதி கமல சரஸ்வதி ராஜேந்திரன் பெற்றார்.
மலேசியக் காவல்துறையில் பல்லாண்டு காலம் சிறந்த பணியாற்றி பல உயர் பதவிகளையும் வகித்த டத்தோஸ்ரீ தெய்வீகன் அவர்களுக்கு தமிழ்க் காவலர் முருகு சுப்பிரமணியன் விருது வழங்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற பின்னரும் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் அவர்களை நன்னெறிக்கு செலுத்தும் உரைகளையும் எழுத்தோவியங்களையும் தெய்வீகன் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் பெயரில் வழங்கப்படும் விருது திருமதி விஜயவாகினி ராஜு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவில் சான்றோர்களுக்கு விருது வழங்குவது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 1987-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டுவரை 11 பேர் இதுவரை கண்ணதாசன் விழாவில் விருதுகளை பெற்றிருக்கின்றனர்.
கண்ணதாசன் விழாவில் திரளான மக்களுடன் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, மாஹ்சா பல்கலைக்கழகத் தலைவரும் வேந்தருமான தான்ஸ்ரீ ஹானிபா, வணிகப் பிரமுகர் தான்ஸ்ரீ ரவி மேனன், மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஆனந்தன், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ நெல்சன் ரங்கநாதன்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மாலையில் தேநீர் விருந்து உபசரிப்புடன் கண்ணதாசன் விழா இனிதே நிறைவு பெற்றது.