
புதுடில்லி: காஷ்மீரின் பகல்காம் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சில அதிரடி நடவடிக்கைகளை அறிவிக்க, பாகிஸ்தானும் பதிலடியாக சில எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் என்னும் சுற்றுப் பயணிகள் அதிகம் வரும் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து எழுந்திருக்கும் முக்கிய நகர்வுகள் பின்வருமாறு:
- பாகிஸ்தானியர்களுக்கு இனி இந்தியாவுக்குள் நுழைய குடிநுழைவு அனுமதி (விசா) கிடையாது என இந்தியா அறிவித்தது.
- அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
- இந்துஸ் நதி நீரை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது.
- இந்துஸ் நதி நீர் நிறுத்தப்படுவது போருக்கான அறிகுறியாகக் கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரித்தது.
- இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான், டெல்லியின் அதிரடி நடவடிக்கைக்குப் பின் இந்தியாவுக்கான வான்வெளியை மூடியது.
- புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பணியாளர் எண்ணிக்கையை இந்தியா குறைத்தது.
- பாகிஸ்தான் வாகா எல்லையை மூடி, சார்க் விசாக்களில் உள்ள இந்தியர்களை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
- சிம்லா ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, “இந்தியா அனைத்துலக சட்டம் -காஷ்மீர் குறித்த ஐ.நா. தீர்மானங்களை” பின்பற்றாததால் இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக இஸ்லாமாபாத் தெரிவித்தது.
- நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 23) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவின் நடவடிக்கைகளை “ஒருதலைப்பட்சமானது, அநீதியானது, அரசியல் தூண்டுதலுடன் கூடியது- சட்ட சார்பு இல்லாதது” என்று இஸ்லாமாபாத் குறிப்பிட்டது.
- பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகளின்படி, வாகா எல்லை உடனடியாக மூடப்படும். இந்த வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் அனுமதியுடன் வாகா வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியக் குடிமக்கள் ஏப்ரல் 30க்குள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும்.
- சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- சீக்கிய மத யாத்ரீகர்களைத் தவிர, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் உள்ள அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
- இப்போது அனைத்து இந்திய உடைமையிலான அல்லது இந்தியா நிர்வகிக்கும் விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
- மூன்றாம் நாடுகள் வழியாக உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்து வணிகப் பரிமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
- இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் தங்குவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 30க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இந்தியத் தூதரகத்தில் அவர்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை மாத இறுதிக்குள் 30 ஊழியர்களாகக் குறைக்கப்படும்.