

புத்ரா ஜெயா: சுகாதார அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) நடத்திய ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்தின்போது, மிக அதிக செலவிலான கலைநிகழ்ச்சியை நடத்தியது குறித்து சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அந்தக் கலைநிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் சித்தி நூர்ஹலிசா, ஜமால் அப்துல்லா போன்றோர் கலந்து கொண்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கினர்.
அமைச்சகத்தின் வரவு செலவு (பட்ஜெட்) கட்டுப்பாடுகள் காரணமாக சுகாதார ஊழியர்கள் குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு, அதிக வேலைப்பளுவால் போராடும் போது, இத்தகைய விலையுயர்ந்த நிகழ்ச்சிக்கு அமைச்சகம் எவ்வளவு செலவழித்தது என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சகம் தனது தலைமையகத்தில் பிரமாண்டமான ஹரி ராயா கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது ஏன் என்றும் இணையவாசிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த நிகழ்ச்சிக்கு செலவான மொத்த தொகை எவ்வளவு என்பதை அறிவிக்குமாறும் சுகாதார அமைச்சரை இணையவாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாரம்பரிய மலாய் நடனக் கலைஞர்களும் மேடையில் நிகழ்ச்சிகளை வழங்கினர், இதில் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கலந்து கொண்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) இரவு 11 மணிக்கு சற்று முன்பு பதிவேற்றப்பட்ட சுல்கிப்ளியின் முகநூல் பதிவு, சுகாதார ஊழியர்கள் என நம்பப்படும் தனிநபர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கான விமர்சன கருத்துகளை ஈர்த்தது.
“அமைச்சகத்தின் ஊழியர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் ‘உயர்ந்த நிலை’ விருந்து மற்றும் விலை உயர்ந்த கலைஞர்களை அழைக்க முடியும். ஆனால் அந்த வகையான செலவினத்தை மோசமான நிலையில் உள்ள மருத்துவமனைகளை சரிசெய்ய பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்,” என்று ஒரு நெட்டிசன் பதிவுக்குக் கீழே உள்ள கருத்துப் பகுதியில் பதிலளித்தார்.
“இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு” என்று ஒருவரும் “இது ஒரு அவமானகரமான நடவடிக்கை” என்று இன்னொருவரும் சாடினர்.
“நான் அமைச்சராக இருந்தால், என் கட்டளையின் கீழ் வேலை செய்பவர்கள் சோர்வை எதிர்கொள்ளும் போது, இத்தகைய விருந்தை ஏற்பாடு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதற்கு நான் வெட்கப்படுவேன்,” என்று முகநூல் பயனர் ஒருவர் கூறினார். நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை பிரச்சினைகளைக் இத்தகைய விமர்சனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
மற்றொரு இணையவாசி பின்வருமாறு எழுதினார்: “நீங்கள் உங்கள் தட்டில் உணவு சேர்க்கலாம். மேலும் ஊழியர்களை எப்போது சேர்க்க போகிறீர்கள்?”
அமைச்சர் சுல்கிப்ளி அகமட் பதவி விலக வேண்டும் என்ற கருத்துகளும் இணைய விமர்சனங்களில் இடம் பெற்றிருந்தன.
இதற்கிடையில் அமைச்சரின் உதவியாளர் விரைவில் இந்த சாடல்களுக்கு அமைச்சர் பதிலளிப்பார் என்று தெரிவித்தாக மலேசியாகினி செய்தி தெரிவித்தது.
சுகாதார அமைச்சகம் பல ஆண்டுகளாக பணியாளர் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது, அதற்கு காரணம் அமைச்சகம் நிதிக் கட்டுப்பாடுகளைக் காரணம் சாட்டியது.
ஊடக அறிக்கைகள், மருத்துவர்கள் உட்பட பல சுகாதார ஊழியர்கள், பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக அதிக வேலை நேரம் மற்றும் அதிக வேலைப்பளு காரணமாக சோர்வடைந்து வருகின்றனர் எனத் தொடர்ந்து தெரிவிக்கின்றன.