கோலாலம்பூர் – கடந்த 2015ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் சேமநிதிக்கான இலாப ஈவு 6.4 சதவீதம் வழங்கப்படும் என அந்த வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 38.24 பில்லியன் ரிங்கிட் தொழிலாளர் சேமநிதி வாரியத்தின் உறுப்பினர்களுக்கு இலாப ஈவாக வழங்கப்படும்.
2014ஆம் ஆண்டில் 6.75 சதவீத இலாப ஈவை தொழிலாளர் சேமநிதி வாரியம் வழங்கியது. 1999ஆம் ஆண்டிற்குப் பின்னர் வழங்கப்பட்ட மிக அதிகமான இலாப ஈவு இதுவே ஆகும். 1999ஆம் ஆண்டில் 6.84 சதவீத இலாப ஈவு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டில் மொத்தம் 44.23 பில்லியன் ரிங்கிட் மொத்த வருமானத்தை தொழிலாளர் சேமநிதி வாரியம் பதிவு செய்தது. இது 2014ஆம் ஆண்டில் பெறப்பட்ட 39.08 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை விட 13.18 சதவீதம் அதிகமாகும்.
இந்த தகவல்களை தொழிலாளர் சேமநிதி வாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ சம்சுடின் ஒஸ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.