காஞ்சிபுரம் – பலரும் எதிர்பார்த்தது போலவே, எந்தக் கூட்டணியோடு இணைவோம் என்ற கேள்விக்கான விடை கூறாமலேயே குழப்பமான சூழ்நிலையில் சனிக்கிழமையன்று பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேமுதிகவால் நடத்தப்பட்ட அரசியல் திருப்புமுனை மாநாடு முடிவடைந்துள்ளது.
ஆனால், விஜயகாந்த்தின் நிறைவுரைக்குப் முன்னர் உரையாற்றிய அவரது துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
“கூட்டணி யாருடன் என்பதை தலைவர் விஜயகாந்த் கூறுவார். ஆனால், நாம் கிங்காக (ராஜாவாக) இருக்க வேண்டுமா? அல்லது கிங் மேக்கராக (ராஜாவை உருவாக்குபவராக) இருக்க வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்” என்ற கேள்வியோடு தனது உரையை முடித்துக் கொண்டார் பிரேமலதா.
அதற்குப் பின்னர் நிறைவுரையாற்றிய விஜயகாந்த், குழப்பமான சில கருத்துகளுடன் யாருடன் கூட்டணி என்பதற்கான எந்தவிதப் பிடியையும் கொடுக்காமல் தனது உரையை முடித்துக் கொண்டார்.
ஆனால், விஜயகாந்தும் தனது உரையில் கூட்டத்தினரைப் பார்த்து முன்வைத்த கேள்வி “எனது மனைவி சொன்னது போல, நாம் கிங்காக இருக்க வேண்டுமா அல்லது கிங் மேக்கராக இருக்க வேண்டுமா?” என்பதுதான்!
அதற்குக் கூட்டத்தில் இருந்த பதிலைப் பார்த்து, “ஆமாம்! நீங்கள் சொல்வது போல் நாம் கிங்காக இருப்போம்” எனக் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார் விஜயகாந்த்.
எனவே, பெரும் எதிர்பார்ப்புடன் இன்று நடைபெற்ற தேமுதிகவின் ‘அரசியல் திருப்புமுனை மாநாடு’ பெரும் ஏமாற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
கூட்டணியை அறிவிக்காமல் மேலும் நாட்களைக் கடத்துவது விஜயகாந்துக்கு எதிரான அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-செல்லியல் தொகுப்பு