சென்னை – தமிழக பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா (படம்) அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார். மேலும் திருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவுற்ற நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதும், தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிரடியாக அவரது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் மீண்டும் அதிமுகவில் அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்துள்ளது.
ரமணாவின் பால்வளத் துறையை இனி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று மாநில ஆளுநர் ரோசய்யா, ரமணாவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ரமணாவுக்கு பதிலாக, காஞ்சிபுரம் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கூடுதலாக கவனிப்பார் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.