காஞ்சிபுரம் – நேற்று இங்கு நடைபெற்ற விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மாநாடு கூட்டணிக்கான எந்தவித முடிவையும் அறிவிக்காமல் முடிவுற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மீண்டும் தனது பழைய பாணியில் தமிழகத்தின் பத்திரிக்கையாளர்களையும், குறிப்பாக தமிழக செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகளையும் கடுமையாக விமர்சித்து சாடியுள்ளார்.
“இந்த இரண்டு தொலைக்காட்சிகள் இருக்கிறதே! தந்தி டிவியும், புதிய தலைமுறையும் – அப்பப்பா, என்னமா செய்தி போடறாங்க! கேள்வி பதிலாம்! ஜெயலலிதாவுக்கு ஆதரவா செய்தி போடறாங்க” என விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார்.
இந்த வார்த்தைகளை அவர் உதிர்த்ததும், தேமுதிக மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்து வந்த தந்தி தொலைக்காட்சி, உடனடியாக அந்த நேரலையை நிறுத்தி வைத்தது.
இருப்பினும், புதிய தலைமுறை தொலைக்காட்சி அலைவரிசை தொடர்ந்து தேமுதிக மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பியது.
பத்திரிக்கையாளர்களையும், தனது உரையில் விஜயகாந்த் கடுமையாகச் சாடிப் பேசினார். பயந்து போய் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுதுகின்றார்கள் என்று அவர் பத்திரிக்கையாளர்களைச் சாடினார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மீண்டும் விஜயகாந்த் பேச்சு குறித்த கண்டனங்கள் எழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-செல்லியல் தொகுப்பு