கோலாலம்பூர் – பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு எதிராக ஏன் இதுவரை 1எம்டிபி நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கேள்வி தொடுத்துள்ளார்.
“அந்தப் பத்திரிக்கை கூறுவது பொய், அவதூறானது என்று மட்டும் கூறும் 1எம்டிபி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அந்தப் பத்திரிக்கை கூறுவது உண்மைதானா என்பது எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கக் கோருகின்றோம்” என்றும் மொகிதின் கூறியுள்ளார்.
“நீதிமன்ற நடவடிக்கை இல்லாத வரையில் அம்னோவும், அரசாங்கமும் பாதிக்கப்படும், காரணம் பொதுமக்கள் அவற்றின் மீது நம்பிக்கை இழப்பார்கள்” என்றும் மொகிதின் விமர்சித்துள்ளார்.
அம்னோவின் நடப்புத் தலைமைத்துவத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள தாமான் இந்தான் டுயுங் என்ற அம்னோ கிளை போர்ட்டிக்சனில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோதே மொகிதின் இவ்வாறு கூறினார்.
“எப்போது எங்கள் மீது அவதூறு வழக்கு தொடுப்பார்கள் என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையினர் காத்துக் கிடக்கின்றனர்” என்றும் கிண்டலாக மொகிதின் கூறியுள்ளார்.
செய்தி வெளியிட்டபோது, நீதிமன்ற நடவடிக்கை எடுப்போம் என முழங்கியவர்கள், அது பொய் செய்தி என்றால் ஏன் இதுவரை அவதூறு வழக்கு தொடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய மொகிதின், அந்தப் பத்திரிக்கையினர் எப்போது எங்கள் மீது நடவடிக்கை எனக் கேட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர் என்றும் மொகிதின் மேலும் தெரிவித்துள்ளார்.