கோலாலம்பூர்: யாயாசான் அல்-புகாரி அறக்கட்டளையின் வரிவிலக்கு அந்தஸ்து குறித்து முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் லிம் குவான் எங் மீது சுமத்திய அவதூறுகள் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 1.4 மில்லியன் மலேசிய ரிங்கிட் இழப்பை முஹிடின் லிம்முக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் லிம் குவான் எங் முஹிடின் தனக்குரிய இழப்பீட்டைச் செலுத்தாவிட்டால் அவருக்கு எதிராக அவர் திவாலானவராக அறிவிக்க வேண்டும் என மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
லிம் குவான் எங்கின் வழக்கறிஞர்கள் குவோக் பார்ட்னர்ஷிப் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினர்.
வழங்கப்பட்ட கால அளவுக்குள் தீர்ப்பின் தொகையை செலுத்தத் தவறியதால் இந்த மனு முஹிடின் மீது தாக்கல் செய்யப்பட்டது எனவும் லிம்மின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் 8-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி – மூன்று அவதூறு அறிக்கைகளுக்கு பொது இழப்பீடாக 3,50,000 ரிங்கிட் (ஒவ்வொன்றுக்கும்) – அதாவது 1.05 மில்லியன் ரிங்கிட்டும், மற்ற கூடுதல் இழப்பீடாக 300,000 ரிங்கிட் இழப்பீடும் – மேலும், 50,000 ரிங்கிட் செலவுத் தொகை எனவும் முஹிடின் லிம்முக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அவதூறு கருத்துகளை மீட்டுக் கொள்ளுமாறும் அவற்றை மீண்டும் பிரசுரிக்கக் கூடாது என்ற உத்தரவும் விதிக்கப்பட்டது.
லிம் குவான் எங்கின் முயற்சி வெற்றி பெற்றால் முஹிடின் இழப்பீட்டுத்தொகையை செலுத்த முடியாத காரணத்திற்காக திவால் ஆனவராக அறிவிக்கப்படலாம்.