கோலாலம்பூர்: 16-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்றும் திடீர் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்றும் பெர்சாத்து கட்சியின் தலைவரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விடுத்திருக்கும் அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் நவம்பர் 2027-இல்தான் முடிவடையும் என்ற நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இப்போதைக்கு பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு இல்லை.
அவருக்கு எந்தவித நெருக்கடியும் தற்போது எழவில்லை. ஆனால், எதிர்க்கட்சிக் கூட்டணியோ நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. முஹிடினால் சிறப்பான தலைமைத்துவத்தையோ மாற்று கருத்துகளையோ வழங்க முடியவில்லை. பாஸ் தலைவர் ஹாடி அவாங்கும் உடல் நலக் குறைவால் துடிப்புடன் செயல்பட முடியவில்லை.
இந்நிலையில் சரிந்து வரும் பெரிக்காத்தான் கூட்டணியின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் வகையிலும் பெர்சாத்து கட்சி உறுப்பினர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், ஓர் அரசியல் வியூகமாக, முஹிடின் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.
நடப்பு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என அடிக்கடி ஊடகச் செய்திகள் வெளிவந்தாலும், அதற்கான அறிகுறிகள் எங்கும் தென்படவில்லை.
இந்நிலையில் அன்வார் தனது நடப்பு தவணையை நிறைவு செய்ய சவால்கள் எதுவும் இருக்காது என்றே பரவலாகக் கருதப்படுகிறது.