சான்பிரான்சிஸ்கோ- ஏர் ஆசியா குழும தலைமைச் செயலதிகாரி டோனி பெர்னான்டசுக்கு மேலும் ஒரு வணிக சாதனை விருது கிடைத்துள்ளது. அமெரிக்க – ஆசியான் வர்த்தக அமைப்பு அவருக்கு ‘நான்காவது தூண்’ விருதை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
டோனி பெர்னாண்டஸ் விருது பெறுகின்றார் (டுவிட்டர் படம்)
அமெரிக்க – ஆசியான் உறவுகள் மேம்பட டோனி பெர்னான்டஸ் அளித்துள்ள பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவரான கெயித் வில்லியம்ஸ், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருதை டோனிக்கு அளித்தார். அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவுக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெற்றுள்ளார் டோனி.
“ஆசியான் வளர்ச்சிக்காக அபரிமிதமான பங்களிப்பை அளித்துள்ள தனி நபர் அல்லது ஒரு நிறுவனத்துக்கு மற்றும் அமெரிக்க – ஆசியான் உறவுகள் மேம்படுவதற்கான பங்களிப்பையும் அளித்துள்ள ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது” என ஏர் ஆசியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
விருதைப் பெற்று கொண்ட பின் பேசிய டோனி ஃபெர்னான்டஸ், ஆசியான் நாடுகள் தைரியமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
“நானும் எனது குழுவும் அமெரிக்க – ஆசியான் வர்த்தக அமைப்பால் விருதளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இதை உண்மையான கௌரவமாகக் கருதுகிறோம். ஆசியான் வட்டாரத்தின் 10 உறுப்பு நாடுகளில் உள்ள வளங்களை மேலும் ஆற்றலுடன் பயன்படுத்துவதற்கு, அந்நாடுகளின் அரசுகள் நல்லிணக்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என நம்புகிறேன்” என்று டோனி பெர்னான்டஸ் மேலும் தெரிவித்தார்.