
கோலாலம்பூர் : கொவிட்-19 பிரச்சனைகளால் சாதாரண மக்களுக்குத்தான் பிரச்சனை. பெரும் பணக்காரர்களுக்கு அத்தகைய பிரச்சனை இல்லை என்பதோடு அவர்களின் சொத்து மதிப்புகளும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன போர்ப்ஸ் வணிக ஊடகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 79 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ஆனால் 2021-இல் இவர்களின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
போர்ப்ஸ் வகுத்திருக்கும் பட்டியல்படி மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரராக ரோபர்ட் குவோக் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இரண்டாவது இடத்தில் இருந்த ஆனந்தகிருஷ்ணன் தற்போது 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிய கொவிட்-19 மறைமுகமாக மலேசியப் பணக்காரர்களுக்கும் உதவி அவர்களின் சொத்து மதிப்பை உயர்த்தியிருக்கிறது என்பதும் இன்னொரு சுவாரசியத் தகவல்.
கொவிட் பரவலால் உலகம் எங்கும் இரப்பர் கையுறைகளுக்கு ஏற்பட்ட அதிகப்படியான தேவையால் மலேசியாவில் சிலர் பணக்காரர்களாக உருவாகியுள்ளனர் அல்லது அவர்களின் சொத்துகளின் மதிப்புகள் உயர்ந்தன என்றும் போர்ப்ஸ் தெரிவித்தது.
மருத்துவக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இரப்பர் கையுறைகளுக்கான தேவை உலக அளவில் பத்து மடங்காக உயர்ந்திருக்கிறது. எனவே, மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் 5 பேர் இரப்பர் கையுறைத் தயாரிப்பு தொழிலுடன் தொடர்புடையவர்கள் என்றும் போர்ப்ஸ் தெரிவித்தது.
மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரரான ரோபர்ட் குவோக் 12.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துடமையைக் கொண்டுள்ளார். 97 வயதான அவர் மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் மிக முதிய வயது கொண்டவராவார்.
9.6 பில்லியன் டாலர் சொத்துகளுடன் ஹோங் லியோங் வங்கிக் குழுமத்தின் தலைவரான குவெக் லெங சான் இரண்டாவது பணக்காரராக மலேசியாவில் திகழ்கிறார்.
5.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் ஆனந்த கிருஷ்ணன் 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
பப்ளிக் பேங்க் வங்கியின் தலைவர் தே ஹோங் பியோவ் 5.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறார்.
மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் பெரும்பாலும் சீனர்களே அதிகம் இடம் பெற்றிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு மலேசியாவின் முதல் 50 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஏர் ஆசியாவின் உரிமையாளர் டோனி பெர்னாண்டஸ் தற்போது அந்தப் பட்டியலில் இல்லை.
கொவிட் பாதிப்பால் ஏர் ஆசியாவின் விமானப் பயணங்கள் முற்றாக நிலைகுத்தின. இதன் காரணமாக கடும் வீழ்ச்சியை ஏர் ஆசியா சந்தித்த காரணத்தால் டோனி பெர்னாண்டஸ் மலேசியப் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது இடம் பெறவில்லை.