கோலாலம்பூர் : ஆசியா – பசிபிக் வட்டாரத்தில் மற்றவர்களுக்கு உந்துசக்தியாகத் திகழும் 50 முன்னுதாரணப் பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது போர்ப்ஸ் அனைத்துலக வணிக இதழ். அவர்களில் ஒருவராக இடம் பெற்று மலேசியாவுக்கும் இந்திய சமூகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன்.
அவருடன் சேர்ந்து மேலும் 2 மலேசியப் பெண்மணிகள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஏபெக் அமைப்பின் செயலகத்தின் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ டத்தோ ரிபெக்கா பாத்திமா சந்தா மாரியா, திரைப்பட இயக்குநர் துங்கு மோனா ரிசா துங்கு காலிட் ஆகியோர் ஆவர்.
67 வயதான அம்பிகா, பிரபலமான வழக்கறிஞர் என்பதுடன் மனித உரிமைகளுக்காக பல முனைப் போராட்டங்களில் ஈடுபட்டவராவார்.
அனைத்துல அளவில் தன் போராட்டங்களுக்காகப் பல விருதுகளையும் கௌரவங்களையும் அவர் பெற்றுள்ளார்.
அன்னை மங்களம் தலைமையேற்று நடத்தி வந்த பூச்சோங் சுத்த சமாஜம் அமைப்பின் தலைவராகவும் அம்பிகா தற்போது செயல்பட்டு வருகிறார்.